search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட விஜயரகு
    X
    கொலையுண்ட விஜயரகு

    திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை- தொண்டர்கள் மறியல்

    திருச்சியில் இன்று பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    திருச்சி வரகனேரி பென்‌ஷனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு (வயது 39). பா.ஜ.க. பாலக்கரை பகுதி மண்டல செயலாளரான இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டின் 6-வது கேட்டில் வாகன நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் பணி செய்து வந்தார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு விஜயரகு மார்க்கெட்டுக்கு சென்றார். பின்னர் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது காலை 6.30 மணியளவில் அங்கு 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் விஜயரகுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயரகுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மார்க்கெட்டில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில நிமிடங்களில் விஜயரகு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜ.க. கோட்ட பொறுப்பாளர் இல.கண்ணன், பார்த்தீபன், இளைஞரணி கவுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

    கொலை குறித்து உதவி போலீஸ் கமி‌ஷனர் ஸ்ரீகாந்த், காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முன் விரோதத்தில் விஜயரகு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    வரகனேரி பகுதியை சேர்ந்த மிட்டாய் பாபு என்ற வாலிபருக்கும் விஜய ரகுவிற்கும் பல்வேறு பிரச்சினைகளில் முன்விரோதம் இருந்துள்ளது.

    குறிப்பாக காதல் திருமண விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விஜயரகு மற்றும் அவரது மைத்துனர் அடைக்கலம் கொடுத்தனர். இந்த பிரச்சினையில் மைத்துனரை மிட்டாய் பாபு சில மாதங்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் மிட்டாய் பாபுவிற்கு எதிராக விஜயரகு கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்.

    அது மட்டுமல்லாமல் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் நடத்திய கடையடைப்பிற்கு மிட்டாய் பாபு ஆதரவாகவும், கடைகளை திறக்க சொல்லி விஜயரகு எதிராகவும் செயல்பட்டனர்.

    மேலும் கொலையுண்ட விஜயரகுவும், மிட்டாய் பாபுவும் கள்ள லாட்டரி விற்று வந்துள்ளனர். இது தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசில் இருவர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் ஒருவரையொருவர் போலீசில் சிக்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதனால் விஜயரகு மீது மிட்டாய் பாபுவிற்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவரை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்று மிட்டாய் பாபு செயல்பட்டார். ஏற்கனவே விஜயரகுவை 2 முறை கொலை செய்யும் முயற்சி நடந்தது. அரிவாள் வெட்டு காயத்துடன் உயிர் தப்பிய விஜயரகு இந்த முறை கொலையாளிகளின் அரிவாள் வெட்டில் இருந்து தப்ப முடியவில்லை. முந்தைய கொலை முயற்சியிலும் மிட்டாய் பாபுவிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொலையினை மிட்டாய்பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்து செய்ததாக கூறப்படுகிறது. பா.ஜ.க. பிரமுகர் கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கொலையாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கொலை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை மர்ம கும்பல் சேதப்படுத்தியுள்ளது. அதிகாலை நேரமாக இருந்த போதிலும் போதிய அந்த பகுதியில் உள்ள மின் விளக்குகளை கொலை கும்பல் அணைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

    இந்தநிலையில் கொலையுண்ட விஜயரகுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்சி கொடியுடன் திரண்ட பா.ஜ.க.வினர் சாலையின் இருபுறமும் அமர்ந்து திடீர் மறியல் செய்தனர். விஜய ரகுவை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியதோடு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    கொலையுண்ட விஜய ரகுவிற்கு அங்கம்மாள் என்ற மனைவியும் 1 பெண் குழந்தையும் உள்ளனர்.
    Next Story
    ×