search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
    X
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    குரூப்-4 தேர்வு மோசடி- சென்னை கல்வித்துறை ஊழியர் கைது

    குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக சென்னையில் கல்வித்துறை ஊழியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கும் ‘குரூப்-4’ தேர்வு முறைகேடு விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது.

    முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் ஆலோசனையின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியது தெரிய வந்தது.

    தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் ரமேஷ், எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றும் திருக்குமரன், முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ்குமார் ஆகிய 3 பேரை நேற்றுமுன் தினம் கைது செய்தனர்.

    தேர்வு அதிகாரிகளாக செயல்பட்ட கீழக்கரை, ராமேசுவரம் தாசில்தார்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் நேற்று மேலும் 4 பேரை கைது செய்தனர். இவர்களில் ஒருவர் இடைத்தரகர். மற்ற 3 பேரும் தேர்வர்கள் ஆவார்கள்.

    இந்தநிலையில் குரூப்-4 மோசடி தொடர்பாக சென்னையில் கல்வித்துறை ஊழியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஓம்காந்தன். நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி-கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் ஆவண கிளார்க்.

     

    கைது

    2016-ம் ஆண்டு முதல் விடைத்தாள்களை வேனில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். சாப்பிடுவதற்காக வேனை வழியில் நிறுத்தி ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி மற்ற ஊழியர்களையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது விடைத்தாள்களை மாற்றுவதற்கு உதவி செய்துள்ளார்.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அவரது வீட்டிலும் போலீசார் சோதனை செய்துள்ளனர்.

    ராமநாதபுரம் கருவூலத்தில் இருந்து வினாத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர். வினாத்தாள்கள் கருவூலம் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் சார் கரூவூலத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஒரே நேரத்தில் வேன்களில் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக 6 வேன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த 6 வேன்கள் சரியான நேரத்தில் சென்னைக்கு சென்றதா? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது வேன்கள் சென்ற வழித்தடத்தில் சோதனைச் சாவடி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது ஒரு வேன் மட்டும் சென்னைக்கு தாமதமாக சென்றது தெரியவந்தது.

    தீவிர விசாரணை நடத்திய போது வேனை வழியில் நிறுத்தி விடைத்தாள்களை மாற்றி இருக்கும் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

    இந்த மோசடியில் ஓம்காந்தன் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதி சிக்கிய 99 பேரும் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கொடுத்து இருக்கிறார்கள்.

    தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த 39 பேரை போலீசார் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். எஞ்சிய 35 பேரையும் கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.

    அவர்கள் அனைவரும் பிடிபட்டால். பணத்தை யாரிடம் கொடுத்தார்கள். பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் யாரிடம் கொண்டு போய் கொடுத்தார்கள் என்ற விபரங்கள் வெளிவரும்.

    இந்த மோசடி தேர்வுத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் தான் நடந்து இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களும் விரைவில் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×