search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வினை போலீசார் எழுதிய போது எடுத்த படம்.
    X
    பெரம்பலூரில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வினை போலீசார் எழுதிய போது எடுத்த படம்.

    சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வை 295 போலீசார் எழுதினர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வை 295 போலீசார் எழுதினர். 26 பேர் தேர்வு எழுத வரவில்லை.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் போலீஸ்காரர்களாக பணிபுரிபவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்திலும், அரியலூர் மாவட்டத்திற்கு உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனத்திலும் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 145 போலீசார் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 134 மட்டுமே கலந்து கொண்டனர். ஆண்களில் 7 பேரும், பெண்களில் 4 பேரும் என மொத்தம் 11 பேர் தேர்வுக்கு வரவில்லை.

    இதே போல் இந்த தேர்வுக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 176 போலீசார் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 161 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆண்களில் 13 பேரும், பெண்களில் 2 பேரும் என மொத்தம் 15 பேர் தேர்வுக்கு வரவில்லை. 85 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது.

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வினை தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஐ.ஜி. தமிழ்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர். இதே போல் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனத்தில் நடந்த எழுத்து தேர்வினை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வுக்கு வந்தவர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு மையங்கள் வீடியோ கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.
    Next Story
    ×