search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மார்ட் கம்பங்கள்
    X
    ஸ்மார்ட் கம்பங்கள்

    சென்னையில் 50 இடங்களில் ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்

    சென்னை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 50 ‘ஸ்மார்ட்’ கம்பங்களில் கேமராக்கள், மழை அளவு கருவி, மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை மாநகரம் முழுவதும் ‘சி.சி.டி.வி.’ எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதனால் மாநகரில் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளது. அதை தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு கருவிகளை ஒரே கம்பத்தில் பொருத்தும் வகையில் ‘ஸ்மார்ட்’ கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. சென்னை மாநகரின் முக்கியமான 50 இடங்களில் இத்தகைய கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சி.சி.டி.வி. (கண்காணிப்பு கேமராக்கள்), மழை அளவு கருவி, சுற்றுச்சூழல் மாசுவை கண்காணிக்கும் கருவி, தகவல் தொடர்பு கருவி மற்றும் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

    இவை அனைத்தும் ஒரே கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் கட்டிடம் அருகேயும் இந்த ஸ்மார்ட் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ஜி.பிரகாஷ் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்மார்ட்’ கம்பங்களில் கேமராக்கள், மழை அளவு கருவி, மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 3-வது கண் எனப்படும் கண்காணிப்பு கேமரா, சென்னை முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. இதனால் பெருமளவில் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ரோடுகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகள் கண்காணிக்கப்பட்டு அவை உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. குப்பைகள் கண்காணிக்கப்பட்டு அந்த பகுதி உடனடியாக சுத்தம் செய்யப்படுகிறது.

    கேமராக்கள் மூலம் கண்காணித்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் கண்காணிக்கப்பட்டு உடனே சீரமைக்கப்படுகிறது.

    மழை அளவு கருவிகள் மூலம் அப்பகுதிகளில் பெய்துள்ள மழை அளவுகள் கணக்கிடப்படுகிறது. மின் விளக்குகள் இரவில் ஒளி தருகின்றன. மக்கள் நல திட்டங்கள், புயல் மழை மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் போன்றவை தகவல் தொடர்பு கருவிகள் (ஒலி பெருக்கி) மூலம் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்” என்றார்.

    Next Story
    ×