search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக காவல்துறை ஒட்டியுள்ள நோட்டீஸ்.
    X
    தமிழக காவல்துறை ஒட்டியுள்ள நோட்டீஸ்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.4 லட்சம் பரிசு

    களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.4 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இரவு 10 மணியளவில் சோதனை சாவடிக்கு வந்த 2 நபர்கள் வில்சனை துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் வில்சனை சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடிய நபர்களின் உருவப்படங்கள் பதிவாகி இருந்தது. அவர்களை தமிழகம் மற்றும் கேரளாவில் போலீசார் தேடும் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து கேரள போலீசாருக்கு களியக்காவிளை சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்களின் உருவப்படங்கள் அடங்கிய காட்சிகள் அனுப்பப்பட்டன. அதனை ஆய்வு செய்த கேரள போலீசார், கண்காணிப்பு கேமிராவில் பதிவான உருவங்கள் அப்துல் சமீம் (வயது 25) மற்றும் தவுபீக் (27) ஆகியோராக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

    மேலும் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் படங்களையும் வெளியிட்டனர். இவர்கள் இருவரும் குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர். காந்தியை தாக்கிய வழக்கிலும், சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலையிலும் அப்துல் சமீமுக்கு தொடர்பு உள்ளது.

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் கைதாகி ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானவர்கள் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    அப்துல் சமீம், தவுபீக் இருவரும் களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சுட்டு விட்டு கேரளாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்

    இதையடுத்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி, சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்கு கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    தப்பியோடிய பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக்கை பிடிக்க இருமாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்துல் சமீம், தவுபீக் இருவரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டு அவர்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும், கேரள போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். இந்த அறிவிப்பு அடங்கிய போஸ்டர்கள் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

    தலைமறைவான பயங்கரவாதிகள் இருவரும் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என்றும், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அங்கும் பயங்கரவாதிகளின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழக-கேரள  எல்லை பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    2 மாநிலங்களிலும் வாகன சோதனையும் நேற்று விடிய விடிய நடைபெற்று வருகிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள  26 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில்  உள்ள கேரள- கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    கேரளாவில் இருந்து நாகர்கோவில் நோக்கி காரில் வந்த பயங்கரவாதிகள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்த பிறகு தாங்கள் வந்த டி.என். 57, ஏ டபிள்யூ 1559 என்ற கருப்பு நிற காரில் ஏறி கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கார் திண்டுக்கல்லில் பதிவு செய்யப்பட்ட காராகும். அந்த எண்ணை வைத்தும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே தமிழக காவல்துறையும் இருவர் பற்றி  தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் இருவர் குறித்தும் தகவல் தெரிந்தால் தக்கலை துணை கண்காணிப்பாளர் போன்: 9498101914, 04651- 250741, களியக்காவிளை காவல் நிலையம் 04651- 244485 , குமரி மாவட்ட கட்டுப்பாட்டுஅறை 04652- 220417 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் சமீம், தவுபிக் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத்பெக் ராவும் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×