search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சங்கரன்கோவில் - செங்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்

    மத்திய அரசை கண்டித்து சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    சங்கரன்கோவில்:

    மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் இந்தியா முழுவதும் நேற்று நடைபெற்றது.

    சங்கரன்கோவில் தேரடி திடல் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் பொருளாளர் மைக்கேல் நெல்சன், இந்திய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தை சேர்ந்த பாலு ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஜ.டி.யூ., சி.பி.ஐ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    மறியல் போராட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் லாலா (எ) சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் 150 பெண்கள் உள்பட 272 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சங்கரன் கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர காங்கிரஸ் கமிட்டி, ஏ.ஐ.டி.யூ.சி., டி.ஒய்.எப்.ஐ., சி.ஐ.டி.யூ. மற்றும் சி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த மறியல் போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 149 பேர் பங்கேற்றனர். அவர்களை தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி ஆகியோர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 47 பேர் பெண்கள் ஆவர்.

    Next Story
    ×