search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சீட்டுகள் சிதறி கிடந்த காட்சி
    X
    வாக்குச்சீட்டுகள் சிதறி கிடந்த காட்சி

    சாலையில் வாக்குச்சீட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் - உரிய விசாரணை நடத்த வலியுறுத்தல்

    குன்னம் அருகே சாலையில் வாக்குச்சீட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் பிரிவு சாலை அருகே உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் சிதறி கிடந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் குன்னம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து குன்னம் தாசில்தார் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையோரத்தில் கிடந்த வாக்குச்சீட்டுக்களை கைப்பற்றி குன்னம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் வெங்கடேஷ்வரன் அந்த சீட்டுக்களை ஆய்வு செய்தார். அப்போது அவை வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புது வேட்டக்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டு என்பதும், வேட்பாளராக போட்டியிட்ட கவிதா ஆறுமுகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த உருளை சின்னத்தில் 119 வாக்குகள் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. அந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே இந்த சீட்டுகள் கொண்டு வரப்பட்டு சாலையோரத்தில் கொட்டப்பட்டதா? அல்லது இந்த வாக்குச்சீட்டுகள் வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே புதுவேட்டக்குடி ஊராட்சி தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கவிதா ஆறுமுகம், தனது ஆதரவாளர்களுடன் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அலுவலர் வெங்கடேஷ்வரனிடம் தனக்கு பதிவான 119 வாக்குச்சீட்டுகள் சாலையில் கிடந்ததால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்.

    அதேப்போல் புது வேட்டக்குடி ஊராட்சி தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ராஜேஸ்வரி காமராஜ், சாந்தி சுரேஷ் ஆகியோரும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி மனு அளித்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் வேப்பூர் ஊராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வேப்பூர் அரசு பெண்கள் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்றது. எனவே வாக்கு எண்ணிக்கையின் போது யாராவது வாக்குச்சீட்டுக்களை எடுத்து சென்றனரா? என்பதை அறிய அங்கு அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புது வேட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. துணிஞ்சம்பாடி, சின்ன துணிஞ்சம்பாடி, புதூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதுவேட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வாக்களிக்க 3044 வாக்காளர்கள் தகுதி பெற்றி ருந்தனர். இதில் 2555 வாக்குகள் பதிவாகியிருந்தன. 9 வார்டுகளை உள்ளடக்கிய இந்த தேர்தலில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட செல்வி தர்மலிங்கம் 1163 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட சாந்தி சுரேஷ் 142 வாக்குகளும், உருளை சின்னத்தில் போட்டியிட்ட கவிதா ஆறுமுகம் 373 வாக்குகளும், ஏணி சின்னத்தில் போட்டியிட்ட ராஜேஸ்வரி காமராஜ் 877 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    சாலையில் சிதறிக்கிடந்த வாக்குச்சீட்டுகளில் வாக்குச்சாவடி எண் 125-ல் பதிவான 60 வாக்குச்சீட்டுகளும், 127-வது வாக்குச்சாவடியில் பதிவான 55 வாக்குச்சீட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சீட்டுகளை சாலையில் வீசி சென்றது யார் என்று தெரியவில்லை. மேலும் அந்த வாக்குச்சீட்டுக்கள் உண்மையிலேயே தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகளா? என்பதும் தெரியவில்லை. இது பற்றி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

    எனவே வாக்குச்சீட்டுகள் சாலையில் சிதறி கிடந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே இது குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×