search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூக்கள் விற்பனை நடந்த காட்சி.
    X
    பூக்கள் விற்பனை நடந்த காட்சி.

    புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு

    புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தர்மபுரி:

    தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பூக்கள் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, ஒடசல்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர். இந்த சந்தையில் சாமந்தி, குண்டு மல்லி, ஊசிமல்லி, கனகாம்பரம், சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றனர்.  

    நாளை புத்தாண்டு பிறப்பதையொட்டி, அனைத்து பொதுமக்களும் தங்களின் வீடுகளுக்கு மற்றும் கோயில்களுக்கு பூக்களை வாங்கி செல்ல, பூ மார்க்கெட்டிற்கு வருகை தருவர். இதனால், தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருகின்றது. இதனால் பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. தருமபுரி பூ மார்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது.

    தருமபுரி பூ மார்க்கெட்டில் இன்று, குண்டு மல்லி ரூ.700-க்கும், சாமந்தி ரூ.80-க்கும், கனகாம்பரம்  ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும்,  அரளி ரூ. 100-க்கும், சன்னமல்லி ரூ.700-க்கும், பட்டன்ரோஸ் ரூ.130 மற்றும் காக்கடா பூ ரூ.450 என அனைத்து பூக்களின் விலையும் கடந்த சில நாட்களை விட இன்று வெகுவாக உயர்ந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதாலும், நாளை புத்தாண்டு என்பதாலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

    மேலும், இன்று மதியத்திற்குமேல் இன்றைய விலையிலிருந்து ஒரு மடங்கு விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வால், கடந்த சில நாட்களாக போதிய விலையில்லாமல் மிகுந்த கவலையடைந்திருந்த  பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×