search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு (கோப்புப்படம்)
    X
    வாக்குப்பதிவு (கோப்புப்படம்)

    தமிழகத்திலேயே அதிகபட்சம் கரூர் மாவட்டத்தில் 85.55 சதவீத வாக்குப்பதிவு

    ஊரக உள்ளாட்சி 2-ம் கட்ட தேர்தலில் 85.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி தமிழகத்திலேயே கரூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
    கரூர்:

    தமிழகத்தில் கடந்த 27-ந் தேதியும் நேற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. கரூர் மாவட்டத்தில் 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 115 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 157 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,401 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடந்தது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 2,662 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    கரூர், தான்தோன்றி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட தேர்தல் நடந்தது. குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 85.55 சதவீத வாக்குகள் பதிவாகின.

    முதற்கட்ட வாக்குப்பதிவை விட 2-ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. முதற்கட்ட தேர்தல் நடந்த 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் 82.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 85.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி தமிழகத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. கிராம பகுதிகள் அதிகம் நிறைந்த தோகை மலை ஊராட்சி ஒன்றியத்தில் 87.41 சதவீத வாக்குகளும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 86.52 சதவீத வாக்குகளும், கிருஷ்ணராயபுரத்தில் 86.04 சதவீத வாக்குகளும், கடவூரில் 82.54 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    அதிகபட்ச வாக்குப்பதிவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கரூர் மாவட்டத்தை பொறுத்தளவில் சட்டமன்ற, பாராளுமன்ற பொதுத்தேர்தல்களிலும் அரசியல் தட்ப வெப்பம் காரணமாக வாக்குப்பதிவு மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருக்கும். அதேபோன்று இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியதும் , கிராம மக்களின் ஆர்வமும், வேட்பாளர்களின் கவனிப்புமே காரணமாக உள்ளன.

    கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை போன்று குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் வரை பட்டுவாடா நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×