search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் இன்று முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்-பேரணி நடந்தது.
    X
    மதுரையில் இன்று முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்-பேரணி நடந்தது.

    மதுரையில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மதுரையில் இன்று பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
    மதுரை:

    அண்மையில் பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இயற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்தன. பல இடங்களில் வன்முறை வெடித்து பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

    தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இஸ்லாமிய அமைப்புகளும் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. மதுரையில் இன்று ஐக்கிய ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து பிரமாண்ட பேரணி -ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார்.

    மதுரை தெற்குவாசலில் இருந்து தொடங்கிய பேரணி, தெற்குவாசல், தவிட்டுச்சந்தை, கீழமாரட் வீதி வழியாக ஓபுளாபடித் துறையை வந்தடைந்தது. அங்கு தேசிய சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டம்- பேரணியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ., பல்வேறு இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள், முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். பலர் தேசிய கொடியுடன் பங்கேற்றனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

    பேரணி, ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. சில இடங்களில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. 
    Next Story
    ×