search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூதாட்டி
    X
    மூதாட்டி

    கோவை மூதாட்டியிடம் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள்

    கோவையை சேர்ந்த கமலம்மாள் சிறுக சிறுக சேமித்து வைத்துள்ள ரூ.33 ஆயிரம் பணம் அனைத்தும் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஆகும்.
    கோவை:

    மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த நடவடிக்கை எடுத்தது கிராமப்புறத்தில் உள்ள ஒரு சில முதியவர்களுக்கு தெரியவில்லை.

    கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம், பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள், தங்கம்மாள் என்ற சகோதரிகள் பழைய ரூபாய் நோட்டுகள் அதிகளவில் சேமித்து வைத்திருந்தனர்.

    அதனை கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சென்றபின் தான் அவர்களுக்கு ரூ.500, ஆயிரம் செல்லாது என்பதே தெரியவந்தது. இதனால் அவர்கள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். இதில், ரங்கம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

    தற்போது, இதேபோல் கோவையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கோவை கொண்டையம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள்(வயது 92). இவரது கணவர் ராஜ்வாலா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து அவர் மகன்களுடன் வசித்து வருகிறார்.

    அப்போது கமலம்மாள் சிறுக சிறுக ரூ.33 ஆயிரம் பணம் சேமித்து வைத்திருக்கிறார். ஆனால் அந்த பணம் அனைத்தும் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஆகும்.

    இதுகுறித்து கமலம்மாளின் மகன் கோபால் கூறுகையில், பண மதிப்பிழப்பு நேரத்தில், நாங்கள் வெளியூரில் இருந்தோம்.

    அப்போது எனது அம்மாவிடம் ரூ.500, ரூ.1000 செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்து தெரிவித்தோம். அதற்கு அவர் எங்கிட்ட எங்க பணம் இருக்கு. எதுவும் இல்லை என்று சொன்னார். அதனால் நாங்களும் அப்படியே விட்டு விட்டோம்.

    இந்த நிலையில் வீட்டில் உள்ள பீரோவை சுத்தப்படுத்தினோம். அப்போது பீரோவில் ஒரு சேலைக்கு அடியில் 51, 500 ரூபாய் நோட்டுகளும், 6 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் என மொத்தமாக ரூ.33 ஆயிரம் ரூபாய் இருந்தது. நாங்களும் இந்த பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு இடங்களில் கேட்டு பார்த்தோம்.

    ஆனால் அவர்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். இது அவர் சிறுக சிறுக சேமித்த பணம். எனவே, அரசுதான் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


    Next Story
    ×