search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருங்கைக்காய்
    X
    முருங்கைக்காய்

    கோவை மார்க்கெட்டில் வெங்காயம், முருங்கைக்காய் விலை குறைந்தது

    வரத்து அதிகரித்துள்ளதால் கோவை மார்க்கெட்டில் வெங்காயம், முருங்கைக்காய் விலை குறைந்துள்ளது.
    கோவை:

    கோவை மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தற்போது அங்கு பெய்த தொடர் மழை காரணமாக பெரிய வெங்காயத்தின் விளைச்சல் குறைந்தது. இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்தது.

    இதனால் பெரிய வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. மொத்த விலையில் பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ. 160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனையடுத்து பெரிய வெங்காயம் எகிப்து, துருக்கி, ஹாலந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கோவை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

    மேலும் இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தற்போது மொத்த விலையில் 1 கிலோ எகிப்து பெரிய வெங்காயம் ரூ. 100-க்கும், துருக்கி, ஆப்கானிஸ்தான் பெரிய வெங்காயம் ரூ. 120-க்கும், ஹாலந்து பெரிய வெங்காயம் ரூ. 130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் அதன் தரத்தை பொருத்து ரூ. 120 முதல் ரூ. 140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சின்ன வெங்காயம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்தும், கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதியில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ராசிபுரம் சின்ன வெங்காயம் மொத்த விலையில் 1 கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக மாநில சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உருளைக்கிழங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்தும், ஆக்ரா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மொத்த விலையில் ஊட்டி உருளைக்கிழங்கு கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை உயர்ந்து ரூ. 35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆக்ரா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் அதன் தரத்தை பொறுத்து ரூ. 20 முதல் ரூ. 25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    முருங்கைக்காய் தாராபுரம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து கோவை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    தற்போது இந்த பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் அடியோடு குறைந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக மொத்த விலையில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ. 600 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது கோவை மார்க்கெட்டுக்கு பரோடா, புதுடெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

    இதனால் தற்போது முருங்கைக்காய் விலை குறைந்து மொத்த விலையில் 1 கிலோ ரூ. 250 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×