search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை
    X
    கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை

    குமரியில் சூறைக்காற்று - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று இரவு முதலே சூறைக்காற்று வீசி வருகிறது. இன்று காலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. கன்னியாகுமரி, லீபுரம், பழத்தோட்டம், கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்றிற்கு மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. வாழைகளும் சேதமடைந்தது.

    குமரி கடலில் ராட்சத அலைகள் எழும்பியது. 10 அடி முதல் 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.

    சூரிய உதயத்தை பார்த்து விட்டு காலை 6 மணிக்கே விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் சங்கமிக்கும் முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தர்கள் புனித நீராடினார்கள். ராட்சத அலைகள் எழும்பியதால் கடலோர காவல்படை போலீசாரும், சுற்றுலா போலீசாரும் ஐயப்ப பக்தர்களை கரையேறுமாறு அறிவுறுத்தினார்கள்.

    கன்னியாகுமரி, கோவளம், வாவத்துறை, சின்னமுட்டம், ராஜாக்க மங்கலம்துறை, பூத்துறை, இரையுமன்துறை, வள்ளவிளை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குமரி கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பு மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு அந்தந்த பகுதி பங்குத்தந்தைகள் மற்றும் மீனவ அமைப்புகள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×