search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம்.
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம்.

    தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல்

    தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய கனைக்ட்-2019 மாநாட்டை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அதிக அளவில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும், நுகர்வதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்தியாவில் அதிக புதுமைகளைப் படைக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

    கடந்த கால சாதனைகளை நினைவு கூர்ந்திடவும், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேலும் சாதனைகள் பல புரியவும் இந்த மாநாடு ஒரு நல்ல வழிகாட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு 2001-ம் ஆண்டு முதல் இணைந்து நடத்தி வரும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கனைக்ட் மாநாடு திகழ்கிறது.

    பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. இதற்குக் காரணம் தமிழ்நாடு ஒரு அமைதியான மாநிலமாகவும், நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்து விட்டு, திறமைமிக்க பொறியாளர்களாக வெளி வருகின்றனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


    இல்லந்தோறும் இணையம் என்ற கொள்கையை செயல்படுத்தும் வண்ணம், அரசின் அனைத்து சேவைகளையும் கிராம மக்களும் அடையும் வகையில், அனைத்து கிராம ஊராட்சிகளும், பாரத்நெட் திட்டத்தை ரூபாய் 1,815 கோடி செலவில் தமிழ்நாட்டில் செயல்படுத்த உள்ளது.

    தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும், கண்ணாடி இழை கட்டமைப்பு மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் 1 ஜி.பி. அளவிற்கு குறையாமல் இணையதள வசதி வழங்கப்படும்.

    இத்துடன் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் தமிழ்நெட் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரப் பகுதிகளுக்கும் அதிவேக இணைய தள வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டங்கள் அடுத்த 18 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட உள்ளன.

     

    தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் வழிமுறைகள், நிறுவனங்களின் நிதி நிலைமையை சீராக்கம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அதிக அளவில் வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கான கருத்துருக்களை உருவாக்க வேண்டும்.

    இதுகுறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை மேலும் வளர்வதற்காகு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×