search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சேலத்தில் போலீஸ் என கூறி மிரட்டி வழிப்பறி - கைதான அ.ம.மு.க. பிரமுகர் சிறையில் அடைப்பு

    சேலத்தில் போலீஸ் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் சின்னதிருப்பதி மெயின்ரோட்டில் கன்னங்குறிச்சி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த முயன்றனர்.

    உடனே அந்த காரை ஓட்டி வந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனை செய்தனர். அப்போது போலீசார் பயன்படுத்தும் 4 தொப்பிகள் மற்றும் 2 லத்தியும் இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து காரை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்த போது அவர் அஸ்தம்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க. இளைஞரணி செயலாளர் ஜெகதீஷ்வரன் (30) என்பதும், போலீஸ் என கூறி கடந்த சில மாதங்களாக அந்த பகுதியினரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் அவர் மீது அஸ்தம்பட்டி உள்பட பல போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

    ஜெகதீஸ்வரன் வந்த கார் யாருடையது என்று போலீசார் அவரிடம் விசாரித்த போது அவர் பதில் கூற மறுத்து விட்டார். இதனால் அது திருட்டு காராக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த கார் மற்றும் காரில் இருந்த 4 தொப்பிகள், 2 லத்திகளையும் பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீஸ்வரன் பிரபல ரவுடியான அஸ்தம்பட்டியை சேர்ந்த சித்தேஷின் சகோதரர் ஆவார். அவர் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×