search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    விக்கிரவாண்டி அருகே சுங்கசாவடியில் கடும் வாகன நெரிசல்

    விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சுங்கசாவடியில் நேற்று இரவு கடும் வாகன நெரிசல் நிலவியது. டோல்கேட்டை கடக்க சுமார் 2 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    விக்கிரவாண்டி:

    தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக நேற்று மாலை முதல் ஊருக்கு புறப்பட்டனர். இவர்கள் பஸ், கார்கள் மூலம் பயணித்த வண்ணம் உள்ளனர்.

    வாகனங்கள் அனைத்தும் சுங்கச்சாவடி வழியாக கடந்து செல்கிறது. ஒவ்வொரு சுங்க சாவடியில் வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூலிக்கப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது.

    அதன்படி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சுங்கசாவடியில் நேற்று இரவு கடும் வாகன நெரிசல் நிலவியது. டோல்கேட்டை கடக்க சுமார் 2 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் 3 மணி நேரம் தாமதம் ஆனதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள்.

    விக்கிரவாண்டி சுங்கசாவடியில் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு 6 வழிப்பாதையும், சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு 6 வழிப்பாதையும் உள்ளது. கடும் நெரிசல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு கூடுதலாக 3 வழிபாதைகள் திறக்கப்பட்டது.

    மேலும் சுங்கசாவடியில் ஊழியர்கள் கவுண்டர்களில் அமர்ந்தபடி பணம் வசூலித்து வந்தனர். ஆனால் நெரிசல் காரணமாக ஊழியர்கள் கீழே இறங்கி வாகன ஓட்டிகள் அருகாமையில் வந்து பணத்தை வசூலித்தனர்.

    இன்று காலையும் சுங்கச்சாவடியில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. இதனால் தீபாவளிக்கு செல்வோர் அவதி அடைந்தனர்.

    விழுப்புரம் பஸ் நிலையத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் போதுமான பஸ் வசதி இல்லாததால் பஸ் நிலையத்தில் விடிய விடிய தவித்தனர். விழுப்புரம் வழியாக சென்ற ரெயில்களிலும் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது.

    கடலூர் பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருச்சி, விருத்தாசலம், சிதம்பரம், விழுப்புரம் மார்க்கமாக செல்வதற்கு கூடுதலாக பஸ்கள் இல்லாததால் ஊருக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

    Next Story
    ×