search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குமரியில் தொடர் திருட்டு: கேரள சிறுவன் கைது

    குமரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கேரள சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல் திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் சபிர் அலி (வயது 28).

    இவர் திங்கள்நகர் ரவுண்டானாவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையை உடைத்து ரூ.7,500 ரொக்கப்பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதேப்போல் இரணியல் நெய்யூர் பகுதியைச் சேர்ந்த விஜய குமார் (50) என்பவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.15,300 ரொக்கப்பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக் கப்பட்டது.

    இந்த 2 கொள்ளைச் சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரணியல் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயிலில் இருந்து இறங்கி வந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அந்த பகுதியில் உள்ள ஒரு முள் புதர் பகுதிக்கு சென்றான்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வெளியே வந்தான் அந்த சிறுவன். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினான். அப்போது அவனது கையில் 5-க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்தது.

    இதையடுத்து போலீசார் அவனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த சிறுவன் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் பள்ளிக்கட்டிய பகுதியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவன் கூறியதாவது:-

    நானும், எனது நண்பன் ஜெசின் (22) என்பவரும் கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் இருந்து ரெயில் மூலம் குழித்துறை வந்தோம். அங்கிருந்து கருங்கல், விழுந்தையம்பலம் பகுதிக்குச் சென்றோம். அங்கு வீட்டில் இருந்த பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றோம் ஆனால் அவர் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி மீண்டும் திருவனந்தபுரம் வந்தோம்.

    அதன்பின்னர் மீண்டும் இரணியலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வந்தோம். அப்போது விஜயகுமார் என்பவர் செல்போன் கடையை உடைத்து அங்கு செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்தோம். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் சென்றோம்.

    பின்னர் 20-ந்தேதி மீண்டும் இரணியல் வந்து சபிர்அலி என்பவர் செல்போன் கடையை உடைத்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்தோம். 21-ந்தேதி மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கடையை உடைத்து அங்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்தோம். தற்போது எனது நண்பன் என்னிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நான் செல்போன் கடையில் திருடிய செல்போன்களை இரணியல் ரெயில் நிலையம் அருகே மறைத்து வைத்திருந்தேன். அதனை எடுக்க வந்த போது போலீசிடம் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவன் கூறினான்.

    இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். அவரது நண்பன் ஜெசினை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×