search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக-அதிமுக
    X
    திமுக-அதிமுக

    விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

    விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
    நெல்லை:

    தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 23-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற்றது.

    நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன், பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரிநாடார் உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகின்றனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ்பேரரசு கட்சி சார்பில் இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

    வேட்புமனுத் தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றில் இருந்தே வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர். அவர்கள் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.-திமு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளர் களுக்கு ஆதரவாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். மேலும் 15 அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொகுதிகளில் முகாமிட்டு ஓட்டுவேட்டை நடத்தினர். கூட்டணி கட்சி தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, பிரேமலதா, ஜி.கே. வாசன், சரத்குமார், நடிகர் கார்த்திக் ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.

    தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், தா. பாண்டியன், நல்லகண்ணு, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் பிரசாரம் செய்தனர். எம்.பி.க்களும் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வந்தனர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்தார். தலைவர்களின் அடுத்தடுத்த வருகையால் கடந்த 15 நாட்களாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரசாரம் அனல் பறந்தது.

    கோப்புப்படம்

    இந்நிலையில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்கின்றனர்.

    தேர்தல் பிரசாரத்திற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என வெளிநபர்கள் ஏராளமானவர்கள் தொகுதிகளுக்கு வந்திருந்தனர். அவர்கள் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு உத்தரவிட்டுள்ளார்.

    திருமண மண்டபங்கள், சமுதாய நலக் கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வெளியூர்களை சேர்ந்தவர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்பது குறித்து சோதனை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாங்குநேரி தொகுதியில் 170 இடங்களில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 36 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் நாங்குநேரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரையில் 23 பேர் போட்டியிடுவதால் வாக்குப்பதிவிற்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 2 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் பணியில் 1400 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரியில் 3 பறக்கும் படை குழுக்களும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும், மற்ற சட்டமன்ற தொகுதியில் 1 பறக்கும் படை குழுவும், 1 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 19 லட்சத்து 92 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகரில் 4 பேரிடம் இருந்து ரூ. 6 லட்சத்து 61 ஆயிரத்து 500-ம், சங்கரன்கோவில், கடையநல்லூர், நாங்குநேரி உள்ளிட்ட புறநகரை சேர்ந்த 9 பேரிடம் இருந்து ரூ. 13 லட்சத்து 30 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை, சி-விஜில் ஆகியவை மூலம் மொத்தம் 520 புகார்கள் வந்துள்ளது. அதில் 41 புகார்கள் விசாரணைக்கு உகந்ததாக இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. 476 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. 3 புகார்கள் நிலுவையில் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் 139 இடங்களில் மொத்தம் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 50 வாக்கு சாவடிகள் பதட்டமானவை ஆகும். தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 1,333 பேர் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாவட்டம் முழுவதும் 39 பறக்கும் படைகளும், 39 நிலை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பதட்டமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் 6 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் ஒரு கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையும், 5 கம்பெனி சிறப்பு காவல் படையும் அடங்கும்.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு அன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின் போதும் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

    பிரசாரம் முடிவடைந்ததும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பணிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடுவார்கள்.
    Next Story
    ×