search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 34 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 ஆயிரத்து 347 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் பல மடங்கு அதிகரித்து 34 ஆயிரத்து 722 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் 2 அணைகளில் இருந்தும் 25 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து காவிரி வழியாக ஒகேனக்கலுக்கு வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 34 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் கொட்டுகிறது. அருவிக்கு செல்லும் நடைபாதையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 ஆயிரத்து 347 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் பல மடங்கு அதிகரித்து 34 ஆயிரத்து 722 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்த மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 113.03 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 114.83 அடியாக உயர்ந்தது. பிற்பகலில் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3-வது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×