search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன்.
    X
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன்.

    எழும்பூர் ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சல் பாதித்த 200 குழந்தைகள் அனுமதி

    டெங்கு அறிகுறி உள்ள 150 முதல் 200 வரையிலான குழந்தைகள் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

    டெங்கு காய்ச்சல் மற்றும் அறிகுறியுடன் சென்னையில் தினமும் 500 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பால் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    குழந்தைகள் நல மருத்துவமனையில் தினமும் வரும் குழந்தைகள் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். டெங்கு அறிகுறி உள்ள 150 முதல் 200 வரையிலான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதில் சராசரியாக 40 முதல் 50 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

    உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

    புறநோயாளிகளாக சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராஜீவ்காந்தி, கீழ்பாக்கம், ராயப்பேட்டை, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டு சமாளித்து வருகின்றனர்.

    டெங்கு அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ரத்த பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மக்கள் இடையே தற்போது ஏற்பட்டு வருவதால் காய்ச்சல் வந்தாலே உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருப்பதே இதற்கான காரணமாகும்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேரமும் காய்ச்சல் வார்டு செயல்படுகிறது. எந்நேரமும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு பாதிப்பால் தமிழகத்தில் இதுவரையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 3 பேர் உயிர் இழந்துள்ளனர். தாமதமாக மருத்துவமனைக்கு வருவதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

    சென்னையில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சகாதார நிலையங்களில் காய்ச்சல் பாதித்து வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை, ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் ரத்து பரிசோதனை கூடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகம் பேர் சிகிச்சை பெற்று செல்வதாக சுகாதாரத்துறைக்கு தினமும் அறிக்கை வந்த வண்ணம் உள்ளது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் காட்சி.

    அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலை தடுக்க ஆயுர்வேத மருந்தான நிலவேம்பு கசாயம், மலை வேம்பு கசாயம் ஆகியவை விநியோகிக்கப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இவை வழங்கப்படுகிறது.

    எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் உப்பு கரைசல் கொடுக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்பு தடுக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×