search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மளிகை பொருட்கள்
    X
    மளிகை பொருட்கள்

    நெருங்கும் தீபாவளி பண்டிகை - மளிகை பொருட்களின் விலை உயர்வு

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் மளிகை பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.120-க்கும், வெல்லம் ரூ.60-க்கும் விற்பனை ஆகிறது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்களும், விரும்பிய உணவு வகைகளையும் செய்து நண்பர்கள், உறவினர்களுக்கு மகிழ்ச்சியுடன் அளிப்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது மளிகை பொருட்கள் விற்பனை சூடுபிடித்து இருக்கிறது.

    ஆனால் அதேவேளை தேவை காரணமாக மளிகை பொருட்களின் விலை உயர்ந்தும் இருக்கிறது. மளிகை பொருட்களின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு அதிகம் என்றும் வியாபாரிகள் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-

    ஏற்கனவே உற்பத்தி பாதிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. பருப்பு பெருமளவில் விளைச்சல் செய்யும் ஆந்திரா மாநிலம் மற்றும் தேனி, விருதுநகரில் உற்பத்தி பாதித்திருப்பதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சரக்குகளும் குறைந்திருக்கிறது. அந்தவகையில் 4-ல் ஒரு பங்கு சரக்கு வரத்து குறைந்திருக்கிறது. இந்த போக்கு இன்னும் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேவேளை தீபாவளியையொட்டி, பலகாரங்கள் செய்ய மக்கள் ஆயத்தமாவார்கள் என்பதால் தேவை காரணமாக மளிகை பொருட்களின் விலையும் உயர தொடங்கி இருக்கிறது.

    அந்தவகையில் துவரம் பருப்பு விலை ரூ.13-ம், உளுந்தம் பருப்பு விலை ரூ.30-ம் உயர்ந்திருக்கிறது. முந்திரி, உலர் திராட்சையின் விலையும் உயர்ந்திருக்கிறது. ஏலக்காயின் விலை குறைந்து வருகிறது. மிளகாயின் விலையும் உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் குண்டு மிளகாய் விலை ரூ.10-ம், நீட் மிளகாய் விலை ரூ.35-ம் உயர்ந்திருக்கிறது. வெல்லம் விலை ரூ.15 உயர்ந்திருக்கிறது.

    பூண்டு விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ மலைப்பூண்டு (முதல் தரம்) கிலோ ரூ.240-க்கு விற்பனை ஆகிறது. 2-ம் தர பூண்டு ரூ.190-க்கும், 3-ம் தர பூண்டு ரூ.170-க்கும் விற்பனை ஆகிறது.

    உணவு தானிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களின் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-

    துவரம் பருப்பு (முதல் தரம்)- ரூ.110, துவரம் பருப்பு (2-ம் தரம்)- ரூ.90, உளுந்தம் பருப்பு (முதல் தரம்)- ரூ.120, உளுந்தம் பருப்பு (2-ம் தரம்)- ரூ.90, பாசிபருப்பு (சிறுபருப்பு)- ரூ.89, கடலை பருப்பு- ரூ.70, மைசூர் பருப்பு (ரோஸ்)- ரூ.65, ஏலக்காய்- ரூ.3,500, முந்திரி (முழு)- ரூ.830, முந்திரி (அரை)- ரூ.650, உலர் திராட்சை- ரூ.250, வெல்லம்- ரூ.60, மிளகு- ரூ.450, கடுகு- ரூ.58, சீரகம்- ரூ.225, வெந்தயம்- ரூ.76, தனியா- ரூ.85, மிளகாய் (நீட்)- ரூ.180, மிளகாய் (குண்டு)- ரூ.130, புளி (முதல் தரம்)- ரூ.95, புளி (2-ம் தரம்)- ரூ.85.

    போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களில் 2-ம் மற்றும் 3-ம் கட்ட வியாபாரிகளிடம் 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டு சீட்டுகள் பிரிக்கும் நேரத்தில் மக்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பண்டு சீட்டுதாரர்களிடம் இருந்து மளிகை சரக்குகளுக்கான தொகையை வியாபாரிகள் பெற்று விட்டார்கள்.

    ஆனால் தற்போது மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருவதால், வியாபாரிகளுக்கு பாதிப்பு தான் ஏற்பட்டு உள்ளது. இனியும் விலை உயர்ந்தால் கட்டுப்படியாகாது என்பதால் இப்போதே பொருட்கள் வாங்கி வைத்து வினியோகித்து வருகிறோம். அந்தவகையில் தீபாவளி பண்டு சீட்டு விவகாரத்தில் வியாபாரிகள் பரிதவித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×