search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை
    X
    சிறை

    சந்தனமரம் வெட்டியதாக கைதான 2 பேர் தர்மபுரி கிளை சிறையில் அடைப்பு

    தென்கரைக்கோட்டை கவரமலை காப்புக்காடு பகுதியில் சந்தனமரம் வெட்டியதாக கைதான 2 பேர் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    தர்மபுரி

    தர்மபுரி மாவட்டம் தென் கரைக்கோட்டை கவரமலை காப்புக்காடு பகுதியில் சிலர் சந்தன மரங்கள் வெட்டுவதாக தர்மபுரி மாவட்ட வனஅலுவலர் ராஜ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன், வனவர் கோவிந்தராசன், வனக்காப்பாளர்கள் வேடியப்பன், சிவன், முனியப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது ராமியன அள்ளி காப்புக்காடு பகுதியில் மரம் வெட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த இடத்திற்கு சென்றபோது 5 பேர் சந்தனமரங்களை வெட்டிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். 

    அவர்கள் வாச்சாத்தி அருகே உள்ள மல்லங்குட்டை கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 40), பிரபு (30) என்பதும், சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றதும் தெரியவந்தது. மேலும், தப்பி ஓடியவர்கள் மல்லங்குட்டை கிராமத்தை சேர்ந்த பெருமாள், வெங்கடேசன், மெனசியைச் சேர்ந்த தீர்த்தகிரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிப்பட்ட முத்து, பிரபு ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். 

    அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரம்பம், கோடாரி, அரிவாள் மற்றும் சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகள் ரூ.30 ஆயிரம் ஆகும். கைதான 2 பேரை அரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய 3 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×