search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சேதமடைந்த கார்.
    X
    விபத்தில் சேதமடைந்த கார்.

    கள்ளக்குறிச்சி அருகே விபத்து- விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் பலி

    கள்ளக்குறிச்சி அருகே இன்று காலை புளிய மரத்தில் கார் மோதி விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அக்கரா பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40) வக்கீல். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் தேவராஜ் அவரது நண்பர்கள் செம்டாகுறிச்சியை சேர்ந்த சங்கர்(40). ஜெயபால் (35). மட்டிகை குறிச்சியை சேர்ந்த ராஜாராம் (37). ஆகியோருடன் ஒரு காரில் அக்கரா பாளையத்தில் இருந்து கடலூருக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் 4 பேரும் கடலூரில் இருந்து அக்கரா பாளையத்துக்கு காரில் புறப்பட்டனர்.

    காரை ஜெயபால் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரை சந்தல் கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஜெயபாலின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் வைக்கபட்டிருந்த பேரிகார்டில் மோதியது. பின்னர் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தேவராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காரில் இருந்த ஜெயபால், சங்கர், ராஜாராம் ஆகிய 3 பேரும் விபத்துக்குள்ளான காரின் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரின் இடிபாட்டுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெயபால், சங்கர், ராஜாராம் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து கச்சிராயபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான தேவராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான தேவராஜிக்கு கவிதா(35) என்ற மனைவியும்,ஜிதேஷ்(9) என்ற மகனும் உள்ளனர். 

    Next Story
    ×