search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஏற்காடு பா.ஜனதா நிர்வாகி கொலை- திமுக பிரமுகரிடம் விசாரணை

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பாரதிய ஜனதா நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க. பிரமுகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா, நாகலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கொளகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலவராக் கவுண்டர் மகன் சின்ராஜ், (45).

    விவசாய தொழில் செய்து வந்த இவர் பா.ஜனதா கட்சியின் ஏற்காடு ஒன்றிய துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது சித்தப்பா சென்றாயக்கவுண்டர் இறந்த பின்னர் அவரது நிலத்தை சென்றாயக்கவுண்டரின் இரு சகோதரிகள் மற்றும் சகோததரர் அலவராக் கவுண்டர் ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    அலவராக்கவுண்டர் இறந்த பின்னர் அவரது நில பாகம் சின்ராஜின் தாயார் கரியம்மாள் பெயருக்கு மாறுதல்ஆனது. இருந்தபோதிலும், கரியம்மாள் நிலத்தை சென்றாயக்கவுண்டரின் சகோதரியான வெள்ளையம்மாளின் மகன் ராமகிருஷ்ணன் என்பவர் பயன்படுத்தி வந்தார்.

    கரியம்மாளின் மகன்கள் தங்கள் நிலத்தை ராம கிருஷ்ணனிடம் இருந்து மீட்டு தரும்படி ஊர் பெரியவர்களிடம் கூற, நேற்று காலை கொளகூர் கிராம, பிள்ளையார் கோவில் திடலில் ஊர்பஞ்சாயத்து கூடி, கரியம்மாளுக்கு சொந்தமான நிலத்தை, அவர்களது வாரிசுகளிடம் ஒப்படைக்கும் படி, ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர். அதற்கு ராமகிருஷ்ணனும் ஒப்புக்கொண்டார்.

    பின்னர் நேற்று மதியம் கொளகூரில் உள்ள சரவணன் டீ கடையில் அமர்ந்திருந்த சின்ராஜை, ராமகிருஷ்ணின் மகன் மணிகண்டன் (25) அரிவாளால் வெட்டினார். இதில் சின்ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்த இறந்தார். இதனை அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    இதை பார்த்த கொலையாளி மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாகானிகேர் வாழப்பாடி டி.எஸ்.பி. உமாசங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அந்த தனிப்படையினர் திருப்பூர், தர்மபுரி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொலையாளியான மணிகண்டனின் சகோதரியை ஏற்காடு ஒன்றிய குழு முன்னாள் தலைவரான தி.மு.க.வை சேர்ந்த சொக்கலிங்கத்தின் தம்பி சொக்கன் திருமணம் செய்துள்ளார். இதனால் சொக்கலிங்கம் தூண்டுதலின் பேரில் சின்ராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் சொக்கலிங்கத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. 

    Next Story
    ×