search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோவை மத்திய சிறையில் அடைப்பு

    உயர்மின் கோபுரம் அமைக்கக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விவசாயிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள இடையன் கிணறு கிராமம் ராசிபுரம் என்ற இடத்தில் இருந்து பவர் கிரீட் நிறுவனம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கேரளா வரை கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளது.

    இதற்காக விவசாயிகளின் விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

    விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சின்னாரி பாளையம் மற்றும் மேற்கு சடையபாளையம் பகுதிகளில் பவர் கிரீட் அதிகாரிகளும், வருவாய் மற்றும் போலீசார் விவசாய நிலங்களுக்குள் இறங்கி உயர் மின் கோபுரம் அமைக்க நிலத்தை அளவீடு செய்ய முயன்றனர்.

    உப்பாறு அணை அருகே உள்ள சின்னாரி பாளையத்தில் அர்ஜூன், வேலுச்சாமி, செல்வராஜ், பசுபதி அம்பிகா, மவுனசாமி ஆகியோரது நிலங்களுக்குள் முன் அறிவிப்பு எதுவும் இன்றி பவர் கிரீட் அதிகாரிகள் போலீசார் துணையுடன் புகுந்து நிலத்தை அளவீடு செய்து உயர் மின் கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க பொறுப்பாளர் சிவகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    மேலும் அளவீடு செய்ய முயன்ற பவர் கிரீட் நிறுவன ஊழியர்களை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 16 பெண்கள் 21 ஆண்கள் என 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் மேற்கு சடையபாளையத்தில் திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாராபுரம் டி.எஸ்.பி. ஜெயராம், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் வருவாய்துறையினருடன் வந்து அக்கிராமத்தை சேர்ந்த கோமதி, தங்க முத்து, ராமசாமி, ரத்தினசாமி உள்பட 6 விவசாயிகளின் விளை நிலங்களுக்குள் புகுந்து உயர் மின் கோபுரம் அமைக்க நிலத்தை அளவீடு செய்யும் பணியை தொடங்கினார்கள்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளும், அவர்களது ஆதரவாளர்களும் உயர் மின் கோபுர எதிர்ப்பாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் வக்கீல் ஈசன் தலைமையில் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    பின்னர் தரையில் அமர்ந்து படுத்து உருண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். நள்ளிரவு 11 மணிக்கு வக்கீல் ஈசன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் முத்து விசுவநாதன், தங்க முத்து, பார்த்த சாரதி, சண்முகம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தாராபுரம் மாஜிஸ்திரேட்டு வீட்டில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வக்கீல் ஈசன் உள்ளிட்டோர் விளை நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×