search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பெண் என்ஜினீயர் பலி
    X
    விபத்தில் பெண் என்ஜினீயர் பலி

    விபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு

    விபத்தில் பெண் என்ஜினீயர் பலியான சம்பவம் தொடர்பாக பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ (23).

    பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை 3 மணியளவில் வேலை முடிந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பினார். குரோம்பேட்டை-ரேடியர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

    பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரும், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான ஜெயகோபால் மகன் திருமண பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

    அந்த வழியாக சுபஸ்ரீ வந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஒன்று திடீர் என்று சரிந்து அவர் மீது விழுந்தது.

    நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியுடன் நடு ரோட்டில் விழுந்தார். அப்போது தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியது. அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    நடுரோட்டில் விழுந்த பேனர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுபஸ்ரீயின் உயிருக்கு எமனாக மாறியது. இதை கண்டவர்கள் பதறி துடித்தனர். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பீகாரை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் என்பவரை கைது செய்தனர்.

    இந்த விபத்தையடுத்து சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. கொடிகள், பேனர்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டன.

    இந்த வழக்கு போக்குவரத்து போலீசார் பதிவு செய்வதா? அல்லது பள்ளிக்கரணை சட்டம்- ஒழுங்கு போலீசார் வழக்குப்பதிவு செய்வதா? என்பது குறித்து அரை மணி நேரம் வாக்குவாதம் நடந்தது.

    இதனால் சுபஸ்ரீயின் உடல் நீண்ட நேரம் சாலையிலேயே கிடந்தது. பின்னர் பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபஸ்ரீயின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ், பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அவரிடம் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×