search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    ரெயில் பயணியை அவமதித்த டிக்கெட் பரிசோதகருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

    ரெயில் பயணியை அவமதித்த டிக்கெட் பரிசோதகருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ‘கோவை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் கடந்த 2014-ம் ஆண்டு தியாகராஜன் என்பவர் ஏறினார்.

    சாதாரண பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்த அவர் டிக்கெட் பரிசோதகரிடம் ரிசர்வ் கோச்சில் இருக்கை ஒதுக்குமாறு கேட்டார்.

    அதற்கு டிக்கெட் பரிசோதகர் ரூ.200 கேட்டுள்ளார். உடனே தியாகராஜன் ரூ.200 தந்தால் அதற்குரிய ரசீது வேண்டும் என கேட்டார். இது டிக்கெட் பரிசோதகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாதாரண டிக்கெட் எடுத்து விட்டு முன்பதிவு பெட்டியில் ஏறியதற்காக அபராதம் விதிக்கப்போவதாக அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது டிக்கெட் பரிசோதகர் பெயருடன் கூடிய பேட்ஜ் அணிந்திருக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் மீது தென்னக ரெயில்வேயில் புகார் தெரிவித்த தியாகராஜன் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். எனினும் ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

    எனவே தியாகராஜன் சென்னையில் உள்ள மாவட்ட ரெயில்வே சமரச தீர்வு மையத்தில் புகார் செய்தார். அதில் டிக்கெட் பரிசோதகரால் அவமதிக்கப்பட்ட தனக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார். முன்னதாக தியாகராஜன் தான் பயணம் செய்த அன்று கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்த காலி இடங்கள் உள்ளிட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக சேகரித்திருந்தார்.

    அதில் சம்பவத்தன்று அந்த ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 7 இருக்கைகள் காலியாக இருந்தது தெரிய வந்தது. எனினும் டிக்கெட் பரிசோதகர், தியாகராஜனுக்கு இருக்கை ஒதுக்கவில்லை. இதையடுத்து தென்னக ரெயில்வே பொது மேலாளர் மற்றும் டிக்கெட் பரிசோதகர் இணைந்து தியாகராஜனுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
    Next Story
    ×