search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயில்
    X
    ஊட்டி மலை ரெயில்

    மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரெயில் மீண்டும் இயக்கம்

    மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயிலாகும். இந்த ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்து சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற காரணத்தால் கடந்த 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் ரத்து செய்யப்பட்டது. மழை நின்றதையடுத்து 14-ந் தேதி முதல் மலை ரெயில் இயக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி ரெயில் கிளம்பியது. இந்த ரெயில் கல்லாறு ரெயில் நிலையத்தை கடந்து காலை 8.23 மணிக்கு அடர்லி ரெயில்நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலைய பகுதிகளுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் கற்கள் மற்றும் பாறாங்கற்கள் உருண்டு விழுந்து கிடப்பதாக ரெயில்வே துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப் பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் கடும் அவதியடைந்தனர். பின்னர் ரெயில் 10.30 மணிக்கு கிளம்பி 11.25 மணியளவில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு வந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் இருப்புபாதை பிரிவு பொறியாளர் ஜெயராஜ் தலைமையிலான ரெயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரெயில்பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று ஒருநாள் மலைரெயில் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இந்த பணிகள் முடிவடைந்து நேற்று மதியம் 1 மணியளவில் குன்னூர்- மேட்டுப் பாளையம் இடையோன சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது. இன்று காலை 7.10 மணியளவில் வழக்கம் போல் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் 150 பயணிகளுடன் ஊட்டிக்கு கிளம்பி சென்றது. சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

    Next Story
    ×