search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாநகர பஸ் சாவியை பறித்துச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர் கைது

    மாநகர பஸ் சாவியை பறித்துச் சென்ற சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
    போரூர்:

    போரூர் கிண்டி டிரங்க் சாலையில் கடந்த 3-ந்தேதி கே.கே. நகரில் இருந்து ராமாபுரம் செல்லும் அரசு மினி பஸ் மணப்பாக்கம் தனியார் மென்பொருள் நிறுவனம் அருகே போய் கொண்டிருந்தது.

    அப்போது காரில் வந்த ஒரு வாலிபர் பஸ்சை நிறுத்தி திடீரென பஸ் சாவியை எடுத்துக் கொண்டு காரில் ஏறி தப்பி சென்றார். இதுகுறித்து ராமாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன் உடனடியாக பஸ் மெக்கானிக்கை வரவழைத்து பஸ்சை அனுப்பி வைத்தார்.

    பஸ்சை வழிமறித்து சாவியை எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் மர்ம நபர் வந்த காரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது பஸ் சாவியை எடுத்து சென்றது ராமாபுரம் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த கவுரிசங்கர் (வயது38) என்பது தெரிந்தது.

    அவரை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று கவுரிசங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பஸ் சாவி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கவுரிசங்கர் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருவது தெரிய வந்தது.

    சம்பவம் நடைபெற்ற அன்று மினி பஸ் சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை இறக்கியதால் பின்னால் காரில் வெகு நேரம் காத்து நின்ற கவுரிசங்கர் பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பஸ் கிளம்பி சென்றது. இதில் ஆத்திரமடைந்த கவுரிசங்கர் பஸ்ஸை பின் தொடர்ந்து காரில் விரட்டி சென்று பஸ்ஸை வழி மறித்து சாவியை எடுத்து சென்றது தெரிய வந்தது.

    கைதான கவுரிசங்கர் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×