search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் அரசு பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்ட காட்சி
    X
    சேலத்தில் அரசு பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்ட காட்சி

    சேலத்தில் 14-ந் தேதி முதல் அரசு சட்டக்கல்லூரி செயல்படும் - எடப்பாடி பழனிசாமி

    சேலத்தில் புதிய சட்டக்கல்லூரி வருகிற 14-ந் தேதி முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

    தமிழக முதல்வராக எம்.ஜிஆர். பொறுப்பு வகித்தபோது 1978-ல் முதல் முறையாக சேலம் அரசு பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்ட சேலம் அரசு பொருட்காட்சியை தொடங்கி வைப்பதில் அவரது தொண்டனாக நான் பெருமைப்படுகிறேன்.

    அன்று முதல் இன்று வரை 204 அரசு பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. நெல்லை, காஞ்சிபுரத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டு நடந்து வருகிறது. அரசு பொருட்காட்சி மூலம் அரசுக்கு 39 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    எதிர்க்கட்சியினர் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன என்பதை இந்த மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருமணிமுத்தாறு கழிவு நீரால் மாசடைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் தொடங்கி நாமக்கல் வரை மாசடைந்த கழிவு நீருடன் காவிரியில் கலக்கிறது. அந்த வகையில் மாசு கலந்த நீரை சுத்திகரிக்க மாநகராட்சி பகுதியில் அணைமேடு, வெள்ளைக்கடை, மான் குட்டை, வண்டிப்பேட்டை ஆகிய 4 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், பாதாள சாக்கடை பணிக் காகவும் 263 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் உபரி நீரை நீரேற்று திட்டத்தின் கீழ் ரூ. 565 கோடியில் 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் கிடைக்கும்.

    காவிரி, கோதாவரி நதி நீர்இணைப்பு திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதன்மூலம் டெல்டா மாவட்ட விவசாயி களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.

    தமிழகத்தின் ஜீவநதியான காவிரியை மாசு இல்லாத நதியாக சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது தமிழகத்தில் உள்ள பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி ஆகிய 4 நதிகளிலும் மாசு படுத்தப்பட்ட நீரை சுத்தப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

    குடிமராமத்து திட்டத்தில் பொதுப்பணித்துறையின் 14 ஆயிரம் ஏரிகளை தூர்வாருவதுடன் கிராம ஊராட்சிகளில் உள்ள ஏரிகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பேரில் திருவள்ளூர் மாவட்டம் மஞ்சகரணை ஏரியை தூர்வாரும் பணியை வருகிற 7-ந் தேதி நான் தொடங்கி வைக்கிறேன்.

    தமிழகத்தில் மேலும் 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அந்த வகையில் சேலத்தில் புதிய சட்டக்கல்லூரி வருகிற 14-ந் தேதி முதல் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ரூ. 13 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 11 ஆயிரத்து 571 பயனாளிகளுக்கு 17.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு, கலெக்டர் ராமன், மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    Next Story
    ×