search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டவாளம்
    X
    தண்டவாளம்

    தண்டவாளத்தில் ஆண் பிணம்- 4 ரெயில்கள் தாமதம்

    வள்ளியூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    வள்ளியூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்றிரவு கிடந்தது.

    இதையடுத்து நாகர் கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலியாகி இருப்பது தெரிய வந்தது. பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டவாளத்தின் நடுவே பிணம் கிடந்ததால் நாகர்கோவிலில் இருந்து சென்ற ரெயில்களும் நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்ற பெங்களூரு, திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆரல்வாய்மொழி, பணகுடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூர் சென்ற ரெயில் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. நாங்குநேரி ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இந்த ரெயில் வழக்கமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு இரவு 9.30 மணிக்கு வந்து சேரும். ஆனால் நேற்று 2 மணி நேரம் தாமதமாக 11.38 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் குருவாயூருக்கு புறப்பட்டுச் சென்றது.

    கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பயணிகள் ரெயில் வள்ளியூரில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    Next Story
    ×