search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஆர்எஸ் அணை
    X
    கேஆர்எஸ் அணை

    கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து ஏற்கனவே 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் திறப்பு 13 ஆயிரத்து 312 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்கள், கேரளாவிலும் கன மழை பெய்து வருகிறது.

    கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 2 அணைகளுக்கும் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணையில் இருந்து காவிரியில் ஏற்கனவே 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முதல் தண்ணீர் திறப்பு 6 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 73.16 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 165 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதே போல கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முதல் தண்ணீர் திறப்பு 6 ஆயிரத்து 812 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 124.8 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் தற்போது 88.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 220 கன அடியாக உள்ளது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து ஏற்கனவே 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் திறப்பு 13 ஆயிரத்து 312 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் காவிரியில் சீறிப்பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் நாளை இரவு ஒகேனக்கல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 8 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் இயக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தநிலையில் இன்றும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 23-ந் தேதி 39.13 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று 43.11 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கபபட்ட தண்ணீர் நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    Next Story
    ×