search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    இரணியல் அருகே காவலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை: உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு?

    இரணியல் அருகே காவலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரணியல்:

    இரணியலை அடுத்த சடையமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், (வயது 58). இவர், மும்பையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். பணி ஓய்வுக்கு பின்னர் அவர், சடையமங்கலத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணன், கருங்கல் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு காலையில் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து மாலையில் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10½ பவுன் தங்க நகைகள் மேலும் ரூ.55 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள், உடைக்கப்பட்ட பீரோவில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கொள்ளையர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×