search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணராஜ சாகர் அணை
    X
    கிருஷ்ணராஜ சாகர் அணை

    கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நேற்று அதிகாலையில் 405 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், மாலையில் உள்ளூர் பாசனத்துக்காக 2908 கனஅடி அளவில் அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    தர்மபுரி:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வார் பேட்டை, மாதபுரா, ஷிராளி உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கடந்த 12-ந் தேதி நீர்வரத்து 8 ஆயிரத்து 456 கன அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 2608 கனஅடியாக அதிகரித்தது. இன்று அணைக்கு நீர்வரத்து சற்று சரிந்து 2546 கனஅடி அளவு குறைந்தது.

    இதற்கிடையே கடந்த 15-ந் தேதி கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சி.எஸ்.புட்ட ராஜூ தலைமையில் கூடிய மாவட்ட காவிரி ஆலோசனைக்குழு கூட்டத்தில் நிலுவை பயிர்களுக்காக அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு தண்ணீர் திறந்து விடுவது என்று முடிவு எடுக்கப்பட்டு நேற்று அதிகாலையில் அணையில் இருந்து 405 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலையில் உள்ளூர் பாசனத்துக்காக 2908 கனஅடி அளவில் அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 124.8 அடி உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று காலை 90.92 அடியாக இருந்தது. இன்று சற்று சரிந்து 90.88 அடியாக குறைந்தது.

    மைசூர் மாவட்டம் டி.எச்.கோட்டை வட்டத்தில் கபிலா நதியின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு நேற்று விநாடிக்கு 1,716 கனஅடி நீர்வரத்து இருந்தது. கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணையின் மொத்த உயரம் கடல் மட்ட அளவில் இருந்து 2.284 அடியாகும். நேற்று அணையின் நீர்மட்டம் 2269.06 இருந்தது. அணைக்கு இன்று நீர்வரத்து 1644 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து நேற்று 500 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இன்றும் 500 கனஅடி அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இரு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் உள்ளூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். ஏற்கனவே வறண்ட நிலையில் காணப்படும் காவிரிஆற்று படுக்கையில் ஆங்காங்கே உள்ள பாறைகளில் தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் வந்து தேங்கி விடும். அதிகளவில் மழை பொழிந்து கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கும்போது மேட்டூர் அணையில் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

    Next Story
    ×