search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாகூரில் நூதன முறையில் மணல் கடத்திய வாலிபர் கைது

    பாகூரில் நூதன முறையில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    புதுவையில் ஆறுகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கட்டுமான பணிக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தற்போது மணல் விலை தங்கம் போன்று விலை உயர்ந்துள்ளது. இதனால் ஆறுகளில் திருட்டுத்தனமாக மணல் எடுத்து சென்று விற்பனை செய்யப்படுகிறது.

    மணல் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டால் அவர்களுக்கு டிமிக்கி காட்டி விட்டு மணல் கொள்ளை சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.

    பாகூர் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளையை தடுக்க பாகூர் போலீசார் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நடவடிக்கையால் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் போன்றவற்றின் மூலம் மணல் கொள்ளையடிப்பதை கைவிட்டு விட்டு தற்போது நூதன முறையில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.

    ஆற்றில் இருந்து சாக்கு பைகளில் மணலை நிரப்பி அதனை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு சென்று மறைவிடத்தில் குவித்து வைத்து பின்னர் போலீசார் கண்டுபிடிக்காத வகையில் மணலை கூண்டு வண்டிகள் மூலம் மற்றும் மினி லாரிகளில் கீழே மணலை பரப்பி விட்டு மேலே மற்ற பொருட்களை எடுத்து செல்வது போல் மணலை கடத்தி செல்கின்றனர்.

    இதுபோல் மணல் கடத்தி சென்ற 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதுபோல் சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில் இருந்து நூதன முறையில் மணல் கடத்தி செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு பாகூர்- பரிக்கல்பட்டு ரோட்டில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.

    இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த கூண்டு போட்ட வேனை தடுத்து நிறுத்தினர். வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது வேனில் பேக்கரி பொருட்கள் எடுத்து செல்வதாக கூறினார்.

    ஆனாலும், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வேனை திறந்து பார்த்தனர். அப்போது வேனில் சில வீட்டு உபயோக பொருட்கள் இருந்தன. அந்த பொருட்களை அகற்றி விட்டு போலீசார் பார்த்த போது வேன் முழுவதும் மணல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குருவிநத்தத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×