search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவின் பால் வேனை சாலையோரம் நிறுத்தி தூக்கம் போட்ட டிரைவர்- பால் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட்டம்
    X

    ஆவின் பால் வேனை சாலையோரம் நிறுத்தி தூக்கம் போட்ட டிரைவர்- பால் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட்டம்

    வேலுரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற ஆவின் பால் வேனை சாலையோரம் நிறுத்தி டிரைவர் தூங்கியதால் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    திருவண்ணாமலை:

    வேலூர் ஆவின் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 6 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் வேன் மூலம் தினமும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பால் பாக்கெட்டுகள் அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆவினுக்கு செல்லும்.

    பின்னர் அங்கிருந்து 60 ஏஜெண்டுகள் மூலம் நகர் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை 5 மணி வரையிலும் திருவண்ணாமலைக்கு வர வேண்டிய பால் வேன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஏஜெண்டுகள் ஆவின் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் வேலூர் ஆவின் நிறுவனத்திற்கு போன் செய்து வேன் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்டனர்.

    அதற்கு வேலூர் ஆவின் அதிகாரிகள் வேனில் வழக்கம் போல பால் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினர்.

    அதிகாரிகள் வேன் டிரைவர் செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வேலூர் ஆவின் அதிகாரிகள் வேனுக்கு என்ன ஆனது என்று பார்க்க காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு சென்றனர். அப்போது திருவண்ணாமலை அருகே சாலையோரம் வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    அதிகாரிகள் வேனை திறந்து பார்த்தபோது வேன் டிரைவர் வேனில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். பின்னர் அவரை எழுப்பி திருவண்ணாமலைக்கு வேனை ஓட்டிச் சென்றனர்.

    இதனால் காலை 3.30. மணிக்கு செல்ல வேண்டிய வேன் 4½ மணி நேரம் காலதாமதத்திற்கு பிறகு 8 மணிக்கு சென்றது. இதனால் பால் பாக்கெட்டுக்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    டிரைவர் எதற்காக தூங்கினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×