search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மின்சார ரெயில் என்ஜினில் 3 கேமிராக்கள் பொருத்தம்

    சென்னை- அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் என்ஜினில் சோதனை முறையில் 3 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி இயக்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் இருந்து வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் 670 மின்சார ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

    இதில் சுமார் 7 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். தண்டவாளத்தில் விரிசல், ரெயில்கள் சிவப்பு சிக்னலை கடந்து செல்வது, தடம் புரள்வது, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் ரெயில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விபத்துக்களை துல்லியமாக கண்டறிய சில விரைவு ரெயில்களின் என்ஜினில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன.


    இதன் அடுத்தக்கட்டமாக சென்னை- அரக்கோணம் தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் என்ஜினில் சோதனை முறையில் 3 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி இயக்கப்படுகிறது. என்ஜின் முகப்பில் உள்ள கேமிரா மூலம் தண்டவாளம், சிக்னல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கலாம்.

    பக்கவாட்டில் உள்ள கேமிரா மூலம் ரெயிலின் பின் பகுதி வரையிலும் படிகளில் யாராவது பயணம் செய்கிறார்களா? என்பதையும் காணலாம்.

    ஓட்டுனர் கேபினில் உள்ள கேமிரா மூலம் அவர்கள் சரியான முறையில் ரெயிலை இயக்குகின்றனரா? என்பதையும் கண்காணிக்க முடியும். இதன் மூலம் விபத்துக்கான காரணத்தை துல்லியமாக கண்டறியலாம். மேலும் அதற்கான தீர்வுகளையும் எளிதில் கண்டறிய முடியும்.

    படிப்படியாக மற்ற ரெயில்களிலும் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால், என்ஜின்களில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்த ரெயில் ஓட்டுனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஓட்டுனர் கேபினுக்குள் நடுப்பகுதியில் கேமிரா வைப்பதால் தாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம் என்பது ஓட்டுனர்களுக்கு மன உறுத்தலை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×