search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் தென்னரசு
    X
    தங்கம் தென்னரசு

    காரியாபட்டியில் லாரிகளில் குடிநீர் வினியோகம் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஏற்பாடு

    காரியாபட்டியில் கடும் குடிநீர் பிரச்சினையை போக்க லாரி மூலம் பொது மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் காரியாபட்டி ஒன்றிய பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் பேரூராட்சிகளுக்கும், கிராமங்களுக்கும் சரியாக செல்லவில்லை.

    மேலும் பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவு சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை இருந்து வருகிறது.

    திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய 3 ஒன்றியங்களும், 2 பேரூராட்சிகளும் உள்ளன.

    தற்போது இந்த பகுதிகளில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருவதை விருதுநகர் கலெக்டரிடம், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு குடிநீர் பிரச்சினையை போக்க மனு அளித்தார்.

    மேலும் காரியாபட்டியில் 11-வது வார்டு, 12-வது வார்டு பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறைதான் பேரூராட்சி மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த கடும் குடிநீர் பிரச்சினையை போக்க லாரி மூலம் பொது மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், நகரச் செயலாளர் செந்தில், மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் தமிழ் வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×