search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடிப்பதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்றை விட 2 அடி உயர்ந்து இன்று காலை 35.50 அடியாக உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 643.63 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட 2 அடி உயர்ந்து இன்று காலை 35.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 51.08 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 109 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை அணை நீர்மட்டம் 58.15 அடியாக உள்ளது.

    அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 21 கனஅடி தண்ணீர் வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 27 அடியாக இருந்தது. ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை 31 அடியாக உள்ளது. மற்ற அணைகளுக்கு குறைந்த அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை வரை அதிக பட்சமாக அடவிநயினார், குண்டாறு அணை பகுதிகளில் 9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 8 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 6 மில்லி மீட்டரும், தென்காசியில் 4 மில்லி மீட்டரும், ராமநதியில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    குற்றாலம் மலைப் பகுதியில் மழை குறைந்ததால் அருவிகளில் தண்ணீர் சற்று குறைவாக விழுகிறது. மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளிக்கின்றனர்.
    Next Story
    ×