search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடிப்பு- கவர்னர் முடிவில் தாமதம்
    X

    ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடிப்பு- கவர்னர் முடிவில் தாமதம்

    சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய கவர்னர் முடிவு எடுக்க தாமதமாகி கொண்டே செல்கிறது. #tngovernor #rajivgandhikilling

    சென்னை:

    ராஜீவ் கொலை கைதிகள் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபட் பெயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் உள்ளனர்.

    அவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்தனர். அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு தமிழக அரசு இதில் முடிவெடுக்கலாம் என்று அறிவித்தது.

    இதை ஏற்று தமிழக அமைச்சரவை கூடி ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான பரிந்துரை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர் அந்த பரிந்துரையை ஏற்று ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இதற்கிடையே ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு ஏற்கனவே தொடர்ந்து இருந்தனர். அவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இதை சுட்டிக்காட்டிய அவர்கள் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை கவர்னர் எந்த முடிவும் எடுக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    சமீபத்தில் அவர்கள் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து இது தொடர்பான மனு அளித்தனர்.

    இதன் காரணமாக ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரும் ஜெயிலில் இருந்து விடுதலையாவது தாமதம் ஆனது. கவர்னர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கில் தீர்ப்பு வரும்வரை எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என கவர்னர் பன்வாரிலால் தீர்மானித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடித்தப்படி உள்ளது.

    சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் எப்போது தீர்ப்பு கூறப்படும் என்பது தெரியவில்லை. சமீபத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கின் அம்சங்களை பாதிக்கப்பட்டவர்கள் மாற்றி கொடுத்துள்ளனர்.

    எனவே விசாரணை கால அளவு மேலும் சில மாதங்களுக்கு செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை தொடர்பாக கவர்னர் எடுக்க வேண்டிய முடிவும் தாமதமாகி கொண்டே செல்கிறது.

    சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு வந்த பிறகு ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையாவது பற்றிய உண்மை நிலவரம் தெரிய வரும். #tngovernor #rajivgandhikilling #supremecourt

    Next Story
    ×