search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை கொல்ல சதி - கோவை ரெயில் நிலையத்தில் கும்பல் கைது
    X

    இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை கொல்ல சதி - கோவை ரெயில் நிலையத்தில் கும்பல் கைது

    இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்யும் திட்டத்துடன் கோவைக்கு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். #ArjunSampath
    கோவை:

    கோவையை சேர்ந்த இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் சென்னையில் இருந்து சிலர் கோவைக்கு ரெயிலில் செல்வதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மத்திய புலனாய்வு பிரிவினர் சென்னையில் இருந்து நேற்று கோவை சென்ற ரெயிலை கண்காணித்தனர்.

    ரெயில் கோவை வந்ததும் ரெயில் பயணிகளில் சந்தேகத்திற்கிடமாக இருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில், பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன், சலாவுதீன் ஆகிய 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களை அழைத்து செல்வதற்காக வந்த கோவையை சேர்ந்த ஆசிக் (37) என்பவரையும் பிடித்தனர்.

    5 பேரையும் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் சென்னையில் இருந்து வந்த மத்திய புலனாய்வு பிரிவு (ஐ.பி.), சிறப்பு புலனாய்வு பிரிவு(எஸ்.ஐ.யூ.) போலீசார் விசாரணை நடத்தினர்.

    கோவை போத்தனூரில் நேற்று நடைபெற்ற கைதி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்ததாக பிடிபட்டவர்கள் கூறினார்கள். இவர்களில் சிலர் முகநூலில் (பேஸ்புக்) இந்து இயக்க பிரமுகர்களின் கருத்துக்களுக்கு எதிராக கடுமையான பதிவுகளை செய்திருந்தனர்.

    இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், அவரது மகன் ஓம்கார் பாலாஜி, இந்து முன்னணி பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோருக்கு எதிராக பேஸ்புக்கில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதாகவும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துக்கள் இருந்தன.

    எனவே அர்ஜூன் சம்பத் உள்பட இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் வந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை விடிய, விடிய நடந்தது.

    இதைத்தொடர்ந்து உக்கடம் பகுதியில் உள்ள அர்ஜூன் சம்பத், தெலுங்கு பாளையத்தில் உள்ள இந்து முன்னணி பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அர்ஜூன் சம்பத்துக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்து வந்ததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2 போலீசார் அவருடனும், 2 போலீசார் அவரது வீட்டிலும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். தற்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. #ArjunSampath
    Next Story
    ×