search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் விவகாரத்தில் துரோகம் செய்த சி.பி.எஸ்.இ. மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம் - ஸ்டாலின்
    X

    நீட் விவகாரத்தில் துரோகம் செய்த சி.பி.எஸ்.இ. மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம் - ஸ்டாலின்

    கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்து துரோகம் இழைத்த சி.பி.எஸ்.இ மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம் என தி,மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #NEET #CBSE #MKStalin
    சென்னை :

    நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

    இதை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை தொடர்ந்து விசாரித்தது.

    இதற்கிடையே, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்துவிட்டதால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

    இந்நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தேர்வு வாரியமான சி.பி.எஸ்.இ.க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழில் எழுதிய மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என கூறிய சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தை கண்டிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்து மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சி.பி.எஸ்.இ. தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    கேள்வித்தாள்களில் துரோகத்தை செய்துவிட்டு மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம் ஆகும். ஆதிக்க வர்கத்தின் ஆணவ மனப்பான்மை, பிளவுப்படுத்தி பேதப்படுத்தும் குணம் போன்றவை சி.பி.எஸ்.இ.யிடம் உள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியது வருத்தம் அளிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #NEET #CBSE #MKStalin
    Next Story
    ×