search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மினிவேன் கவிழ்ந்து விபத்து: கை துண்டான மாணவனுக்கு நிவாரணம் கேட்டு மறியல்
    X

    மினிவேன் கவிழ்ந்து விபத்து: கை துண்டான மாணவனுக்கு நிவாரணம் கேட்டு மறியல்

    ஆலத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்தில் கை துண்டான மாணவனுக்கு நிவாரணம் கேட்டு பள்ளி மாணவ -மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேரை கூவத்தூர் அருகில் உள்ள பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்காக நேற்று முன்தினம் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு என்பவர் தன்னுடைய சொந்த மினிவேனில் அழைத்துச் சென்றார்.

    ஆலத்தூர் அருகே சென்றபோது மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜின் வலது கை துண்டானது. மேலும் பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. வண்டியை ஓட்டிச்சென்ற உடற்கல்வி ஆசிரியர் காயம் ஏற்படாமல் தப்பினார்.

    இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியர் அன்பரசுவை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உயர் சிகிச்சை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளி எதிரில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார், வட்டாட் சியர் ராஜ்குமார் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×