search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் ஓடுகிறதா? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
    X

    கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் ஓடுகிறதா? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

    கண்டக்டர் இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கப்படுவதற்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 1975-ம் ஆண்டு முதல் அரசு போக்குவரத்து கழகங்கள் தொடங்கப்பட்டு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை, விழுப்புரம் உள்பட 6 போக்குவரத்து மண்டல கழகங்களும், சென்னை பெருநகர போக்குவரத்து கழகமும், மாநில விரைவு போக்குவரத்து கழகமும் உள்ளன.

    இங்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதில், சுமார் 33 ஆயிரம் ஊழியர்கள் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

    பயணிகள் பஸ்களில், நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர் இல்லாமல், ஓட்டுனர் மட்டும் உள்ள பஸ்கள் பல இயக்கப்படுகின்றன.

    இது மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிரானது ஆகும். மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக பயணிகள் ஏற்றப்படுவதை தடுப்பது, பஸ்களை சுத்தமாக பராமரிப்பது போன்ற பொறுப்புகள் நடத்துனருக்கு உள்ளது.

    ஆனால், நடத்துனரே இல்லாமல், நடத்துனரின் பணியை ஓட்டுனருக்கு வழங்கி, ஓட்டுனரை மட்டும் கொண்டு இயங்கும் அரசு பஸ்கள் ஏராளமாக தமிழகத்தில் உள்ளது. இது சட்டவிரோதமாகும். இந்த நடைமுறையை தடுக்க வேண்டும். அதற்கு தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகரம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதா? என்பதற்கும், இந்த வழக்கிற்கும் பதில் அளிக்கும்படி போக்குவரத்து செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×