search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் இருந்து தப்பிய பெண் மாவோயிஸ்டு கோவையில் ஊடுருவலா? - போலீசார் சோதனை
    X

    கேரளாவில் இருந்து தப்பிய பெண் மாவோயிஸ்டு கோவையில் ஊடுருவலா? - போலீசார் சோதனை

    கேரளாவில் இருந்து தப்பிய பெண் மாவோயிஸ்டு ஊடுருவதை தடுக்க கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து போலீசார் விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர்.
    கோவை:

    கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், பாலக்காடு மாவட்ட வன பகுதிகளில் மாவோயிஸ்டுகள் கும்பலாக பதுங்கி உள்ளனர். இவர்களில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் சிகிச்சைக்காக தமிழகத்துக்குள் ஊடுருவ இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த பெண் மாவோயிஸ்டு சுந்தரி உள்பட சில மாவோயிஸ்டுகள் காரில் தப்பித்துள்ளதாகவும், அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவக்கூடும் என்றும் கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


    இதைத்தொடர்ந்து கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லை பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது. ஆனைக்கட்டி, முள்ளி, மாங்கரை, பில்லூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் தடுப்பு அமைத்து வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர்.

    குறிப்பாக கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வாகன ஓட்டிகளின் விவரம் முழுமையாக சேகரிக்கப்படுகிறது. சுந்தரி உள்பட தேடப்படும் மாவோயிஸ்டுகள் சிலரின் புகைப் படங்கள் செக்போஸ்டில் பணியாற்றும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம், காரமடை கோப்பனாரி வனத்திலும் இங்குள்ள அரக்கடவு, எழுத்துக்கல் புதூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.

    ஆனைக்கட்டியை ஒட்டியுள்ள காட்டுக்குழிக்காடு, ராயர் ஊத்துப்பதி, கம்பு கண்டி மற்றும் அட்டுக்கல், சேம்புக்கரை, தூமனூர் உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்த சோதனை நேற்று பிற்பகலில் தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக நீடித்தது. எல்லை வழியாக வரும் அரசு பஸ்களையும் நிறுத்தி சந்தேகத்திற்கிடமாக யாராவது இருக்கிறார்களா? என சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் சோதனையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 40 பேர், மாவட்ட போலீசார் 50 பேர், ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×