search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊராட்சி அமைப்புகள் செயலற்று முடங்கி உள்ளது - சட்டசபையில் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு
    X

    ஊராட்சி அமைப்புகள் செயலற்று முடங்கி உள்ளது - சட்டசபையில் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

    தமிழகத்தில் பல ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம் வருவாய் இல்லாத காரணத்தால் ஊராட்சி அமைப்புகள் செயலற்று முடங்கி இருப்பதாக சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் குற்றம் சாட்டி உள்ளார். #TNAssembly #TMAnbarasan
    சென்னை:

    சட்டசபையில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:-

    இட ஒதுக்கீட்டு முறையை சட்டப்படி கையாளாமல் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அவசரக் கோலத்தில் நடத்த அரசு முடிவு செய்தது. இதனை ஒழுங்குப்படுத்த தி.மு.க. நீதிமன்றத்தை அணுகியது.

    இட ஒதுக்கீட்டை மேற்கொண்டு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்திட நீதிமன்றம் உத்தரவிட்டும் 1½ ஆண்டாக தமிழக அரசு தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்தி வருவதால் மத்திய அரசிடம் இருந்து ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் நிதியை தமிழகம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு தள்ளிப்போட்டு வருகிறது. எனவே இந்த தேர்தலை உடனே நடத்த வேண்டும்.

    உள்ளாட்சி மன்றங்களில் பொது சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர தேவையான குறைந்தபட்ச பணியாளர்கள் கூட இல்லாத நிலை உள்ளது. இதனால் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் தவிக்கின்றன.

    உள்ளாட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட உதவி இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஒன்றிய அளவில் சிறப்பு அலுவலர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன.

    மொத்தத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத உள்ளாட்சி நிர்வாகம் தலையில்லா உடம்பாக காட்சி அளிக்கிறது.

    தமிழகத்தில் பல ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம் வருவாய் இல்லாத காரணத்தால் ஊராட்சி அமைப்புகள் செயலற்று முடங்கி உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், மின்சார கட்டணம் கட்ட முடியாமல் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க முடியாமலும் தத்தளிக்கிறது.

    சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெம்மேலி, மீஞ்சூரில் தலா 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன.

    இப்போது நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர், போரூரில் 400 மில்லியன் லிட்டர் கொண்ட நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும், இது முடிவடைந்தால் அடுத்த 45 ஆண்டுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அமைச்சர் கூறி இருக்கிறார்.

    இது எப்போது தொடங்கப்படும்? டெண்டர் வைத்து விட்டீர்களா? இது எப்போது செயல்படும்?

    தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த போது ஒரு ஊர் சிறக்க நூலகம் வேண்டும் என 12,524 கிராமங்களில் நூலகம் உருவாக்கினார். ஆனால் இப்போது அந்த நூலகங்கள் பாழ்பட்டு பழைய பொருட்கள் போடும் சேமிப்பு கிடங்காக காட்சி அளிக்கிறது. எனவே நூலகங்கள் மீண்டும் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, மாங்காடு, சிட்லபாக்கம், மாடம்பாக்கம், திருநீர்மலை, பெருங்களத்தூர், பீர்க்கன் கரணை ஆகிய 8 பேரூராட்சிகளில் தினசரி சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக 2012-ல் கீரப்பாக்கத்தில் 20 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பு மதில் சுற்றுச்சுவர் அமைத்த பிறகே பணிகளை தொடங்க வேண்டும் என்றதால் இன்னும் அங்கு குப்பை சேகரிக்க முடியவில்லை.

    கலைஞர் ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களை எங்கள் தளபதி தொடங்கி மகளிருக்கு சுழல்நிதியை வழங்கினார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த குழுக்கள் செயல்படாமல் முடங்கி உள்ளது. புதுவாழ்வு திட்டம் என்ற மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் இழுத்து மூடப்பட்டு பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தில் மொத்த பணமும் கொடுத்து ஸ்கூட்டர் வாங்கி அதிகாரிகளிடம் காண்பித்த பின்னரே அரசு மானியம் விடுவிக்கப்படுகிறது. கையில் பணம் இல்லாத ஏழை பெண்கள் பயன்பெற முடியவில்லை.

    சென்னை புறநகர் பகுதியான மணிமங்கலம், சோமங்கலம், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி ஏரிகள் தூர் வாரப்படாததால் மழைக் காலத்தில் உபரிநீர் அடையாற்றில் கலப்பதால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஏரிகளை தூர்வார வேண்டும்.

    தாம்பரம் - பல்லாவரம் உள்ளிட்ட நகராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 72 ஊராட்சிகளுடன் இயங்கும் உத்திரமேரூர் ஒன்றியத்தை உத்திரமேரூர், சாலவாக்கம் என 2 ஒன்றியமாக பிரிக்க வேண்டும்.

    குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, மாங்காடு, திருநீர்மலை, சிட்லபாக்கம், அய்யப்பன்தாங்கல் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

    ஆலந்தூர் தொகுதியில் 70 சதவீத சாலைகள் சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. இங்குள்ள 10 ஊராட்சிகளில் உள்ள சாலைகளை அமைத்திட போதிய நிதி ஒதுக்கி சீரமைத்து தர வேண்டும். ஆலந்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்த திட்ட பணிகளை உடனே செயல்படுத்த வேண்டும். வேளச்சேரி - பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×