search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு - கோவை இடையே இரட்டை அடுக்குமாடி ரெயில்
    X

    பெங்களூரு - கோவை இடையே இரட்டை அடுக்குமாடி ரெயில்

    பெங்களூரு - கோவை இடையே இரட்டை அடுக்குமாடி ஏர்கண்டிசன் ரெயில் (உதய் எக்ஸ்பிரஸ்)வருகிற 10-ந்தேதி முதல் இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. #SouthernRailway

    தருமபுரி:

    சென்னை - பெங்களூரு இடையே ஏற்கனவே இரட்டை அடுக்குமாடி ஏர்கண்டிசன் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் காட்பாடி வழியாக பெங்களூரு செல்கிறது.

    இதேபோல பெங்களூரு - கோவை இடையே இரட்டை அடுக்குமாடி ஏர்கண்டிசன் ரெயில் (உதய் எக்ஸ்பிரஸ்)வருகிற 10-ந்தேதி முதல் இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஏற்கனவே இரட்டை அடுக்குமாடி ரெயில் வெள்ளோட்டம் கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வரை நடத்தப்பட்டது. இந்த ரெயில் நிற்பதற்காக நடை மேடைகளும் சரிசெய்யப்பட்டது. கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்ததால் இந்த ரெயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் இந்த ரெயிலை இயக்க ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


    கோவை ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு இந்த ரெயில் (எண்: 22666) புறப்படும். திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு 6.28 மணிக்கு வரும். இந்த ரெயில் 7.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்திற்கும், 8.12 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தையும் வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மொரப்பூர், பொம்மிடி, ஜோலார்பேட்டை வழியாக 10.34 மணிக்கு குப்பம் ரெயில் நிலையம் வந்தடையும். பங்காருபேட்டைக்கு 11.03 மணிக்கும், ஒய்ட்பீல்டு ரெயில் நிலையத்துக்கு 11.39 மணிக்கும், கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலையத்துக்கு 11.59 மணிக்கும் வந்து சேரும். பகல் 12.18 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு வரும். 12.40 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.

    பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்:22665)கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு 2.27 மணிக்கும், கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலையத்துக்கு 2.35 மணிக்கும், ஒய்ட்பீல்டு ரெயில் நிலையத்துக்கு 2.44 மணிக்கும், மாலூர் ரெயில் நிலையத்துக்கு 3 மணிக்கும், பங்காருபேட்டை ரெயில் நிலையத்துக்கு 3.19 மணிக்கு சென்று சேரும்.

    குப்பம் ரெயில் நிலையத்துக்கு 3.44 மணிக்கு வரும் இந்த ரெயில் சேலத்துக்கு மாலை 5.47 மணிக்கு வந்து சேரும். ஈரோட்டுக்கு இரவு 5.50 மணிக்கு போய் சேருகிறது. திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு இரவு 7.38 மணிக்கும், கோவை வடக்கு ரெயில் நிலையத்துக்கு இரவு 8.28 மணிக்கும் செல்லும். கோவை ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு இரவு 9 மணிக்கு போய் சேரும்.

    இந்த ரெயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த ரெயிலை ஜோலார்பேட்டை, மொரப்பூர், பொம்மிடி ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ரெயில்வேதுறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த ரெயிலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் தெற்கு ரெயில்வே வெளியிடவில்லை என்றாலும் ரெயில் அட்டவணை ரெயில்வே வெப்சைட்டில் வெளியாகி உள்ளது.

    கோவை - பெங்களூரு இடையே 419 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 45 நிமிடத்தில் இந்த ரெயில் கடக்கும். மணிக்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரெயில் செல்லும். மொத்தம் 10 ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். #SouthernRailway

    Next Story
    ×