search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.வி.சேகர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் -  அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
    X

    எஸ்.வி.சேகர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    ‘கோர்ட்டு உத்தரவை மதிப்பது அரசின் கடமை’ என்றும், ‘நடிகர் எஸ்.வி.சேகர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #SVeShekher #MinisterJayakumar
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தமிழகத்தில் குற்றங்கள் அதிகமாகி சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியிருக்கிறாரே?

    பதில்:- சட்டம்-ஒழுங்கு பற்றி தி.மு.க. பேசக்கூடாது. தி.மு.க. ஆட்சிகாலத்தில் நடந்த கலவரங்களையும், அக்கிரமங்களையும் மக்கள் மறக்கமாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் நடந்துவந்த காட்டுமிராண்டி தர்பார் ஒழிக்கப்பட்டு, சாதி-மத கலவரமின்றி தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கனிமொழி பேசலாமா? அது தவறு.

    கேள்வி:- தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று திவாகரனுக்கு, சசிகலா தரப்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறதே?

    பதில்:- இது அவர்களது குடும்ப சண்டை. அதற்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை.

    கேள்வி:- நடிகர் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படுவாரா?


    பதில்:- நீதிமன்ற உத்தரவை தலைவணங்கி நிறைவேற்றுவது அரசின் கடமை. எனவே எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றம் வலியுறுத்தும் நடவடிக்கைகளை நிச்சயம் அரசு மேற்கொள்ளும்.

    கேள்வி:- ‘கர்நாடக மாநில தேர்தலால் தான் காவிரி விவகாரம் தள்ளிப்போகிறது’, என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?

    பதில்:- இந்த கருத்து தமிழக மக்களுக்கே வேதனை தருகிறது. அவரது மனதின் எண்ணம் வெளியே வந்திருக்கிறது. தமிழக நலனை எண்ணாமல், கர்நாடக நலனை முன்வைத்து பேசிய இந்த பேச்சு நிச்சயம் ஏற்கமுடியாது.

    கேள்வி:- உறுப்பினர் சேர்க்கையை பொறுத்துதான் ரஜினிகாந்த் கட்சியின் பெயரை அறிவிப்பார் என விமர்சனங்கள் எழுகிறதே?

    பதில்:- தமிழகத்தை தீய சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்க அதிமுக எனும் பேரியக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, அவரது அழைப்பை ஏற்று மக்கள் ஓடோடி சென்று கட்சியில் இணைந்தனர். ஆனால் இன்றைக்கு தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை எவ்வளவு? என்பதை கமல்ஹாசன் சிதம்பர ரகசியமாக வைத்துள்ளார். உறுப்பினர் சேர்க்கையை எதிர்பார்த்து கட்சி தொடங்கும் தினத்தை ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக கூறுகிறார்கள். தமிழக மக்களிடம் இவர்கள் இருவருக்கும் வரவேற்பு இல்லை என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.

    கேள்வி:- கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

    பதில்:- கர்நாடகாவில் யார் ஆட்சியில் அமரவேண்டும் என்று தமிழக மக்களோ, நாங்களோ தீர்மானிக்க முடியாது. ராமனோ, ராவணனோ யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லை. எங்களுக்கு தேவை காவிரியில் தமிழகத்தின் உரிமை. அது அமல்படுத்தப்பட வேண்டும். அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

    மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.  #SVeShekher #MinisterJayakumar #SVeShekher #Jayakumar
    Next Story
    ×