search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை பல்கலைக்கழகத்தில் தரமில்லாத பி.எச்.டி. - ஆய்வு நிபுணர் குழு சோதனையில் கண்டுபிடிப்பு
    X

    சென்னை பல்கலைக்கழகத்தில் தரமில்லாத பி.எச்.டி. - ஆய்வு நிபுணர் குழு சோதனையில் கண்டுபிடிப்பு

    சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்புக்கான விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படாதது நிபுணர் குழு நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    சென்னை பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் மிக பழமை வாய்ந்ததாகும். இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பி.எச்.டி. டாக்டர் பட்டத்துக்கு ஆய்வு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் பலர் ஆய்வு முடித்து வெளியேறுகிறார்கள்.

    ஆனால், அவர்கள் செய்த ஆய்வு முறையாக நடக்கவில்லை. தரம் குறைந்த நிலையில் அவை உள்ளன என்று இப்போது தெரிய வந்துள்ளது.

    பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பி.எச்.டி. ஆராய்ச்சிகள் எப்படி நடைபெற வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை சென்னை பல்கலைக்கழகம் முறையாக பின்பற்றவில்லை.

    மாணவர்கள் சமர்ப்பிக்கும் பி.எச்.டி. ஆராய்ச்சி கட்டுரைகளை (திசிஸ்) வெளி பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்வது வழக்கம்.

    அவ்வாறு 2016-17-ம் கல்வி ஆண்டில் பி.எச்.டி. முடித்து சமர்ப்பித்த 600 ஆய்வு கட்டுரைகளை இந்த நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த குழுவில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    அவர்கள் இதுவரை 100 கட்டுரைகளை ஆய்வு செய்து முடித்துள்ளனர். அவற்றில் பல கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்து தயாரிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ஆய்வு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

    பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. படிப்பவர்களை ஆய்வு செய்வதற்காக டாக்டரல் கமிட்டி என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். அதில் 3 பேராசிரியர்களும், ஒரு துறை சார்ந்த நிபுணரும் இருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலவரையரையில் அந்த மாணவர்களின் தரத்தை ஆய்வு செய்வார்கள்.

    பி.எச்.டி. ரெகுலர் படிப்பில் இருப்பவர்களை 6 மாதத்துக்கு ஒரு தடவையும், பகுதி நேர படிப்பில் இருப்பவர்களை ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வை முடித்து அவர்கள் அறிக்கையும் தர வேண்டும்.

    ஆனால், சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டரல் கமிட்டி முறையான ஆய்வுகளை செய்யவில்லை. பல மாணவர்கள் டாக்டரல் கமிட்டி ஆய்வு செய்யாமலேயே தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

    ஆராய்ச்சி கட்டுரைகளை 3 வெளி பேராசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஒருவர் வெளி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், மற்றொருவர் வெளி மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும், இன்னொருவர் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

    அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய சொல்வார்கள். அந்த விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது.

    சென்னை பல்கலைக் கழகத்தில் 2016 ஜனவரி முதல் 2017 வரை மே வரை துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இதனாலும் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

    இது தொடர்பாக துணை வேந்தர் துரைசாமியிடம் கேட்டபோது, பி.எச்.டி. படிப்பவர்கள் குறைந்தது 2 ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

    தேசிய மாநாடுகளில் 4 ஆண்டுக்குள் பங்கேற்க வேண்டும். 5-வது ஆண்டில் டீன் அல்லது மூத்த பேராசிரியர்கள் டாக்டரல் கமிட்டியில் இடம்பெற்று இருப்பார்கள். மாணவர்களின் ஆய்வு செயல்பாடு சரியில்லை என்றால் அவர்களை படிப்பை விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.

    நிபுணர் குழு ஆய்வு குறித்து மூத்த பேராசிரியர் ஒருவர் கூறும் போது, 300 பக்கங்கள் கொண்ட ஒரு பி.எச்.டி. ஆய்வு கட்டுரையை முறையாக ஆய்வு செய்வதாக இருந்தால் 3 மாதங்கள் வரை ஆகும். ஆனால், நிபுணர் குழுவினர் சில கட்டுரைகளை ஒரு வாரத்தில் ஆய்வு செய்து முடிவை சொல்லி இருக்கிறார்கள். சில கட்டுரைகளை ஒரு நாளிலேயே ஆய்வு செய்து முடிவை கூறி இருக்கிறார்கள். இது, கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறினார்.
    Next Story
    ×