search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவக்கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
    X

    மருத்துவக்கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தகவல் அளித்துள்ளது.

    மதுரை:

    தமிழக மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் எட்வின்ஜோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து கரூர் மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி கயிலைராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கில், பணிமூப்பு அடிப்படையில் தனக்குதான் மருத்துவக் கல்வி இயக்குனர் பதவி வழங்கப்பட வேண்டும். எனவே எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து, உடனடியாக ரேவதி கயிலைராஜனை மருத்துவக்கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிவில், மருத்துவக்கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பான அரசாணையையும், தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்து ஐகோர்ட்டு டிவி‌ஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் அந்த பதவிக்கு தகுதியான நபரை 6 வாரத்தில் பரிசீலித்து நியமிக்கவும் டிவி‌ஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அந்த பதவி காலியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்கு காரணமான சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது கோர்ட்டு அவமதிப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ரேவதி கயிலைராஜன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு கடந்த 31-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான அரசு வக்கீல் மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்கு தகுதியானவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை தயார் செய்து அரசுக்கு அனுப்பி உள்ளது. அந்த பட்டியல் மீது முடிவு எடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தமிழக மருத்துவக்கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டதற்கான ஆணையை சமர்ப்பித்தார்.அதைத்தொடர்ந்து நீதிபதிகள் எந்த அடிப்படையில் எட்வின் ஜோவை நியமித்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு வக்கீல் அனுபவ அடிப்படையில் நியமித்துள்ளோம் என்று பதில் அளித்தார். #tamilnews

    Next Story
    ×